இயற்கை உரங்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என தொழில்துறை அமைப்பான அசோசேம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அசோசேம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
உயிரி உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. இந்த உரங்களுக்கான வரியை அதிகப்படுத்தியுள்ளதன் மூலம் ரசாயன உரங்களை பயன்படுத்தும் நிலை நோக்கி தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இயற்கை உரங்கள், இயற்கைப் பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றுக்கு அதிக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் ரசாயன உரங்களை பயன்படுத்தும் நிலை உருவாகும். இதனால் மக்களின் உடல்நலனுக்கு தீங்குகள் உருவாகும்.
இந்த துறைக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் நேரடியாகவே ரசாயன உரங்களை பயன்படுத்த ஊக்குவிப்பதுபோல உள்ளது. இதனால் சுற்றுச் சூழல் மாசு உருவாகும். தவிர மக்களின் உடல் நலத்திலும் ஆரோக்கியக் கேடுகளைக் கொண்டுவரும். தவிர இந்த துறைக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது அரசு முன்னெடுக்கும் பல திட்டங்களுக்கு முரணாகவே உள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த தூய்மை இந்தியா, சாயில் ஹெல்த் கார்டு, தூய்மை கங்கை மற்றும் பல்வேறு இயற்கை நல திட்டங்களுக்கு முரணானது என்றும் கூறியுள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னர் உயிரி உரங்கள் மற்றும் உயிரி கட்டுப்பாட்டு முகவர்கள் குறைந்த வரி வரம்புக்குள் இருந்தனர். பெருவாரியான மாநிலங்களில் 5 முதல் 6 சதவீத வரி வரம்புக்குள் இருந்தது. தங்களது சான்றிதழ் அடிப்படையில் பலரும் உற்பத்தி வரி மற்றும் பல்வேறு வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தனர்.