வணிகம்

ஜிஎஸ்டியால் தங்க கடத்தல் அதிகரிக்கும்: வர்த்தகர்கள் கருத்து

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரியில் தங்கத்தின் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம் கடத்துவது அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி-க்கு முன்பாக தங்கத்துக்கு 1.2 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டியில் 3 சதவீதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கள்ளச்சந்தை பெருகும் என தங்க வர்த்தகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

சிறிய நகை கடைகள் பில் இல்லாமல் விற்பதையே விரும்புவார்கள். இதனால் பெரிய நகைகளின் விற்பனை பாதிக்கக்கூடும் என கொல்கத்தாவை ஜேஜே கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் ஹர்ஷத் அஜ்மீரா கூறினார். முன்பு ஒரு சதவீத வரியை சேமிப்பதற்காகவே பில் இல்லாமல் நகை வாங்கினார்கள். இப்போது 3 %மாக உயர்த்தப்பட்டதால், பலரும் பில் இல்லாமல் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். இதனால் சிறிய நகைகளின் விற்பனை அதிகமாகும் என அஜ்மீரா தெரிவித்தார். தவிர இந்தியா அதிக தங்க நுகர்வு நாடாக இருப்பதால், இந்த வரி உயர்வு காரணமாக தங்கம் கடத்துவது அதிகமாக இருக்கும். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அப்போதும் தங்க கடத்தல் அதிகமாக இருந்தது.

ஜிஎஸ்டி காரணமாக தங்கம் கடத்துவதினால் அதிக லாபம் இருக்கிறது.வரியை குறைத்து, தங்கம் கடத்துவதை அரசு தடுக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த ஜுவல்லரி உரிமையாளர் ஒருவர் கூறினார். ஆண்டுக்கு 800 டன் அளவுக்கு இந்தியா தங்கம் இறக்குமதி செய்கிறது.

SCROLL FOR NEXT