நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இரு சக்கர வாகன விற்பனையில், ஹிரோமோட்டோ கார்ப் நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளி, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. முதலிடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் 2,49,077 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனம் 2,09,790 வாகனங்களை விற்றிருக்கிறது. இரண்டாம் இடத்துக்கும் மூன்றாம் இடத்துக்கும் 39,287 வாகனங்கள் குறைவாகும்.
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் டிவிஎஸ் 1,83,805 வாகனங்களை விற்றது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் 35.51 சதவீத வளர்ச்சியை டிவிஎஸ் அடைந்திருக்கிறது. மாறாக ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனை 0.51 சதவீதம் சரிந்திருகிறது. கடந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டில் 2,10,876 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் தற்போது 2,09,790 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை சரிந்திருப்பதால் ஹீரோமோட்டோ கார்ப் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலிடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 9,73,725 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 22.15 சதவீதம் வளர்ச்சி ஆகும். நான்காவது இடத்தில் யமஹாவும், ஐந்தாம் இடத்தில் சுசூகியும் இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் வளார்ச்சி இருக்கும் என்பதையே தற்போதைய விற்பனை வளர்ச்சி காட்டுகிறது.