வணிகம்

கடன் பத்திரங்களில் கூடுதலாக ரூ.3,000 கோடி முதலீடு: வருங்கால வைப்பு நிதி ஆணையம் முடிவு

செய்திப்பிரிவு

பிஎப் அமைப்பு `ஏஏபிளஸ்’ தரச்சான்று பெற்றிருக்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது. முன்பு `ஏஏஏ’ தரச்சான்று பெற்றிருக்கும் கடன் பத்திரங்களில் மட்டுமே பிஎப் அமைப்பு முதலீடு செய்து வந்தது. இதில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் அளவை 2 சதவீதம் உயர்த்தி இருப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு கூடுதலாக பிஎப் முதலீடு செய்யும்.

தற்போதைய விதிமுறைகளின் படி, பிஎப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக பிஎப் அமைப்புக்குள் வரும் தொகையில் 10 சதவீதம் வரை ஏஏஏ கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வந்தது. ஏஏஏ தரச்சான்றுக்கும் கீழே முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் இருப்பதாக கிரிசில் நிறுவனம் அறிக்கை அளித்தது. அதனை தொடர்ந்து பிஎப் அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்கியது. ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி கூடுதலாக பிஎப் அமைப்புக்கு டெபாசிட் வருகிறது.

5 வங்கிகளுடன் ஒப்பந்தம்

பிஎப் தொகையை வசூல் செய்வது, சந்தாதாரர்களுக்கு தொகையை வழங்குவது, பென்ஷன் மற்றும் காப்பீடு ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிஎப் அமைப்பு ஐந்து வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. பிஎப் அமைப்புக்கு இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.125 கோடி மீதமாகும். இந்த 5 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பிஎப் தொகையை நெட்பேங்கிங் மூலமாக பிஎப் கணக்குக்கு செலுத்த முடியும்.

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு ஆண்டுக்கு ரூ.350 கோடி அளவுக்கு பிஎப் அமைப்புக்கு செலவாகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை ஆன்லைன் முறைக்கு மாறியதால் இந்த செலவு ரூ.175 கோடியாக குறைந்தது. தற்போது 5 வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதால் மேலும்ரூ.50 கோடி செலவு குறையும். இதே காரணத்துக்காக மேலும் 7 வங்கிகளுடன் பிஎப் அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா ஆகிய வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கிகளுடன் ஒப்பந்தம் உருவாகும் பட்சத்தில் பிஎப் அமைப்பின் செலவுகள் மேலும் குறையும். பிஎப் அமைப்பில் 4.5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். பிஎப் அமைப்பு ரூ.12 லட்சம் கோடியை கையாளுகிறது. பிஎப் நிர்வாக கட்டணம் தற்போது 0.65 சதவீதமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT