வணிகம்

இன்னும் ஆறு ஆண்டுகளில் வங்கிகள் கிளைகளுக்கு அவசியம் இருக்காது: நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் கருத்து

செய்திப்பிரிவு

தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் ஆன்லைன் மூலமான வங்கி பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வங்கி கிளைகளுக்கான தேவை இருக்காது என நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் காந்த் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இன்னும் ஆறு ஆண்டுகளில் வங்கி கிளைகள் வைத்திருப்பது என்பது அதிக செலவாக கூடிய விஷயமாக இருக்கும். குறிப்பாக ஆன்லைன் வங்கி பரிமாற்றங்களுடன் ஒப்பிடும் போது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக இருப்பதினால் வங்கி கிளைகளுக்கான தேவை குறையும். நிதிச்சேவை பிரிவில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தகவல்களை ஆராய்வதன் மூலம் கடன் வழங்கும்.

இணையம் மற்றும் மொபைல் போன்களின் வரவு காரணமாக நிதிச்சேவை நிறுவனங்கள் தகவல்களை எளிதாக ஆராய்ந்து கடன் வழங்க முடியும். தகுதி மற்றும் தேவை இருக்கும் நபர்களுக்கு எளிதாக இந்த நிறுவனங்கள் கடன் வழங்க முடியும். இணையம் மற்றும் தகவல்கள் காரணமாக அனைவருக்கும், குறிப்பாக கிராமப்புரங்களில் இருப்பவர்களுக்கும் கூட நிதிசேவை கிடைக்கும்.

இந்தியாவில் 900 நிதிச்சேவை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் சுமார் 300 கோடி டாலர் நிதி திரட்டி இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் வங்கித்துறையின் போக்கினை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்தியாவில் ஒரு வாடிக்கையாளர்கள் கையகப்படுத்த 1 டாலர் மட்டுமே செலவு செய்தால் போதும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 28 முதல் 30 டாலர் வரி செலவாகிறது.

கடந்த 45 ஆண்டுகளில் 45 வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 18 மாதங்களில் 21 பேமென்ட் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்து வருகிறேன். தொழில் புரிவதற்கான சூழலை மத்திய அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT