டயர், வீல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ட்வீல் (TWHEEL) எனப்படும் காற்றில்லா சக்கரங்களை உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. வழக்கமான சக்கரங்கள், வீல்+டயர் என அமைந்திருக்கும். இதில் டயர்கள் காற்று நிரப்பப்பட்டு அதன் அழுத்தத்தில் இயங்கும். இதனால், பஞ்சர், டயர் விரைவில் வழுக்கையாதல் என பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
பிரான்ஸின் மிச்செலின் நிறுவனம் ட்வீலை வடிவமைத் துள்ளது. இதில், காற்று நிரப்பப்பட்ட ட்யூபுக்குப் பதில் வளையும் தன்மை கொண்ட பாலியூரித்தின் ஸ்போக்ஸுகள் உள்ளன. காற்றில்லா சக்கரங்கள் புதிய முயற்சி அல்ல. ஏற்கெனவே ராணுவப் பயன்பாட்டு வாகனங் களில் இவை இடம்பெற்றுள்ளன. தேனடை (ஹனிகோம்ப்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நான் நியுமிடிக் ("non-pneumatic) வகை சக்கரங்களை விஸ்கான்ஸின்- மாடிஸன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கடந்த 2008-ம் ஆண்டு கண்டறிந்தனர்.
இவ்வகை சக்கரங்களைப் பொதுச் சந்தைக்குக் கொண்டு வருவதில், தென் கொரியாவின் ஹான்கூக், ஜப்பானின் பிரிட்ஜ் ஸ்டோன், பிரான்ஸின் மிச்செலின் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் 9 இன்ச் அளவுள்ள, எலெக்ட்ரானிக் நகர்வு நாற்காலிகளில் பயன் படுத்தத்தக்க காற்றில்லா சக்கரங்களை வடிவமைத்தது. 2011-ம் ஆண்டு டோக்கியோ மோட்டார் சந்தையில் இவற்றை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் பொதுப் பயன்பாட்டுக்கு வர வில்லை.
ஹான்கூக் நிறுவனம் 2013 செப்டம்பரில் பிராங்பர்ட் மோட்டார் கண்காட்சியில் ஐ-பிளெக்ஸ் என்ற பெயரில் காற்றில்லா சக்கரங்களை அறிமுகப்படுத்தியது. பாலி யூரித்தின் கூட்டுப்பொருள்களால் உருவாக்கப்பட்ட இச்சக்கரங்கள் 95 சதவீதம் மறுசுழற்சி செய்ய உகந்தவை.
சந்தையில் மிச்செலின்
மிச்செலின் நிறுவனம், காற்றில்லா சக்கரங்களுக்கு இறுதி வடிவம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. வட அமெரிக்கா விலுள்ள தனது ஆலையை காற்றில்லா சக்கரங்களைத் தயாரிப்பதற்காகவே, அர்ப்பணிக்கப்போவதாக மிச்செலின் தெரி வித்துள்ளது.
ஜான் டீர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள மிச்செலின், ஜான் டீரின் புல் அறுக்கும் இயந்திரங்களில், ட்வீல் சக்கரங்களைப் பொருத்தியுள்ளது.
இது தொடர்பாக, மிச்செலின் ட்வீல் தொழில்நுட்ப துணைத் தலைவர் ரால்ப் டிமென்னா, “நுகர்வோர் சந்தையில் கார் மற்றும் ட்ரக்குகளில் ட்வீல்-ஐ பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயல்கிறோம். ஆனால், இதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை உறுதியாகக் கூறுவது கடினம். அந்த அளவுக்கு தொழில்நுட்ப மேம்பாடு அவசியம். தற்போதைய நிலையில் கட்டுமானம், லேண்ட்ஸ்கேப்பிங் போன்ற துறைகளில் ட்வீல்-ஐ வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்து கிறோம். குறைவான வேகம், சாலை அல்லாத பயன்பாடுகளில் இச்சக்கரங்களைப் பயன்பாட்டுக் கொண்டுவதில் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.