பாரதிய மஹிளா வங்கியை (பிஎம்பி) தனியாக நடத்துவதால் செலவு அதிகமானது, மேலும் பெண்களுக்கென நடத்துவதால் அதன் வாடிக்கையாளர் எண்ணிக் கையும் குறைவாக இருந்தது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதென்று முடிவு செய்யப் பட்டது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.
மக்களவையில் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், பெண்களுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட மஹிளா வங்கி பெரும்பாலானவர்களைச் சென் றடையவில்லை. இதனால் இதன் நிர்வாகச் செலவும் அதிகமானது. இதற்கு மாற்றாக எஸ்பிஐ-யுடன் இணைத்ததால் இது பலதரப்பு மக்களையும், கூடுதலான மக்களிடமும் சென்று சேரும் என்று அவர் கூறினார்.
பாரத ஸ்டேட் வங்கியில் 126 கிளைகளை மகளிர் நிர்வகித்து வருகின்றனர். ஆனால் பாரத் மஹிளா வங்கியின் 7 கிளைகளை மட்டுமே பெண்கள் நிர்வகித்து வருகின்றனர். இதனால் பொதுவாக வங்கியின் வாடிக்கையாளர் அடிப்படையில் கணக்கிடப்படும் நிர்வாகச் செலவு பிற வங்கிகளை விட மஹிளா வங்கிக்கு அதிகம், மேலும் இதில் கடன் பெறுவோர் மிகக் குறைந்த அளவிலான பெண்களே என்று அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கென்ற பிரத்யேக கடன் திட்டங்கள் உள்ளிட்டவை பெருமளவிலான எண்ணிக்கை கொண்ட வங்கிக் கிளைகளால் மட்டுமே சாத்தியமாகும். அதிக கிளை இருப்பதால் நிர்வாக செலவும் குறையும். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் புதிதாக தொடங் கப்பட்ட வங்கிக் கிளைகளைக் கொண்ட பாரத் மஹிளா வங்கியால் இது சாத்தியமாகாது என்று அவர் குறிப்பிட்டார்.
பிஎம்பி வங்கி ரூ. 192 கோடியை மட்டுமே கடனாக அளித்துள்ளது. ஆனால் எஸ்பிஐ தனது 20 ஆயிரம் கிளைகள் மூலம் பெண்களுக்கு அளித்துள்ள கடன் தொகையின் அளவு ரூ. 46 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டார். மேலும் 2 லட்சம் ஊழியர்களைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கியில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் என்றும் அவர் கூறினார்.
இயக்குநரே இல்லை
மத்திய அரசின் கீழ் இயங்கும் 42 பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைவர்களே இல்லை என்று மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.
ஆண்ட்ரூ யூலே அண்ட் கம்பெனி, பாரத் கோக்கிங் கோல், காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஹெச்எல்எல் லைஃப்கேர், ஐடிஐ, ஹெச்எம்டி, இந்திய சுற்றுலா மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ராஷ்ட்ரிய ரசாயன மற்றும் உர நிறுவனம், ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ், ஹிந்துஸ்தான்கேபிள்ஸ் ஆகிய நிறுவனங்களில் இயக்குநர் குழு உறுப்பினர்கள் இல்லாமல் உள்ளனர். 42 நிறுவனங்களுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரே இல்லை. 42 நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவிலேயே இந்த காலிபணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
நன்கொடை வரம்பு நீக்கம்
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் அதிகபட்சம் அளிக்கும் நன்கொடைக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதற்கேற்ப நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.