முருகப்பா குழுமத்தின் அங்கமான கார்போரண்டம் யுனிவர்சல் (சியுஎம்ஐ) நிறுவனம் ஒருங்கிணைந்த மின் கனிம வளாகத்தை கேரள மாநிலம் களமசேரியில் ரூ.80 கோடி முதலீட்டில் திறந்துள்ளது.
ஜிர்கோனியா பபிள் பியூஷன் எனும் ஆலையும் இரண்டு அலுமினிய பியூஷன் ஆலையும் இந்த வளாகத்தில் அமையும். மூன்று கனிம ஆலைகள் ஒரே வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தோடு இங்கு இடம்பெற்றுள்ளது என்று குழுமத்தின் துணைத் தலைவர் எம்.எம். முருகப்பன் தெரிவித்தார்.
ஜிர்கோனியா பபிள் பியூஷன் ஆலையில் 3 ஆயிரம் டிகிரி வெப்பத்தில் ஜிர்கோனியா கனிமம் பிரித்தெடுக்கப்படும். இது செராமிக்ஸ், ரெபிராக்டரீஸ், நிற கலவிகள் மற்றும் அணுசக்தித் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆலை வளாகம் தவிர, கனிமங்களுக்காக காக்க நாடில் சர்வதேச தரத்திலான ஆலையும், ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின் ஆலை கேரள மாநிலம் மணியாறிலும், ரஷ்யாவில் சிலிகான் கார்பைடு வளாகம், பாக்ஸைட் சுரங்கம் குஜராத் மாநிலத்திலும், குவார்ட்ஸ் சுரங்கம் ரஷியாவின் வோல்கோகிராட் ஓப்பிளாஸ்டிலும், ஜிர்கோனியா பியூஷன் பதனிடும் ஆலை தென்னாப்பிரிக்காவிலும் உள்ளது.
இதனால் கனிம பிரிவில் அலுமினியாஸ், சிலிகான் கார்பைடு, ஜிர்கோனியாஸ், பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் அஜூர் துகள் எஸ், நெபுலக்ஸ், மைக்ரோகிரிட்ஸ் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இவை அனைத்தும் பொறியியல் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,200 கோடியாகும். இதில் 35 சதவீதம் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. னிவாசன் தெரிவித்துள்ளார்.
கார்போரண்டம் தயாரிப்புகள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்தி ரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.