வணிகம்

இறக்குமதியைக் குறைத்து, கட்டமைப்பு முதலீட்டை அதிகரியுங்கள் - அரசுக்கு அசோசேம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அதேசமயம் அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதற்கு கட்டமைப்புத் துறைக்கு வரிச் சலுகை அளிப்பதன் மூலம் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று அசோசேம் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தேவையற்ற இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இதற்கு மாற்றாக உருக்கு, நிலக்கரி ஹைட்ரோகார்பன்களுக்கு மாற்று கண்டறிய வேண்டும்.

ஏற்றுமதியில் நிலவும் அரசு நிர்வாக ரீதியிலான கால தாமதத்தைத் தவிர்த்து ஊக்கத் தொகை அளிப்பதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அசோசேமின் தேசிய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோ சனைக் குழு தெரிவித்துள்ளது.

2012-13-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 14,400 கோடி டாலராகும். இதுதான் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி) அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக் கட்டையாக உள்ளது என்று குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர் சுஷ்மா பெர்லியா ஆகியோர் தலைமையிலான இக்குழு, அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மின்சாரம், சாலை போக்குவரத்து, துறைமுகம் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை எடுப்பதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் அத்துடன் பொருள் வரத்து அதிகரித்து சேவைத்துறையும் வளர்ச்சி யடையும். இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இவை அனைத்தையும் நடப்பு நிதி ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.

கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கு மத்தியில் உள்ள முதலீட்டுக்கான அமைச்சரவைக் குழு உள்ளதைப் போல மாநில அளவில் குழு அமைப்பது சரியான நடவடிக்கையாக அமையும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் குழு மூலம் 100 மெகா திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதைப் போல மாநில அளவிலும் செயல்படுத்தினால் கூடுதலான முதலீடுகள் கட்டமைப்புத் துறையில் வந்து சேரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தங்க வங்கி அமைப்பதன் மூலம் தங்க இறக்குமதியைக் குறைக்க முடியும். இது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை வெகுவாகக் குறைக்க உதவும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தங்க வங்கியை மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ அமைக்கலாம். இந்த வங்கி வெளிநாடுகளில் தங்கத்தை, சர்வதேச விலை நிலவரத்துக்கேற்ப வாங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

லாபத்தின் மீது விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு (எம்ஏடி) முறைக்கு விலக்கு அளிப்பதன் மூலம் கட்டமைப்பு திட்டப் பணிகளில் முதலீடுகளை மேலும் ஈர்க்க முடியும் என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT