பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது. இது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
மூன்று பேர் கொண்ட நடுவர் குழு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. 2014-ம் ஆண்டில் வருமான வரித்துறை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் ரூ.10,247 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சிக்கு மூலதன ஆதாயம் பரிமாற்றம் செய்ததில் அடைந்த ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. இதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.20,945 கோடி வரியை மத்திய நேரடி வரி ஆணையம் கோரியிருந்தது. மேலும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தன்னிடம் மீதமுள்ள 9.8% பங்குகளை கெய்ர்ன் இந்தியாவிற்கு மாற்றவும் தடை விதித்தது. கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் 2011-ல் இதனை வேதாந்தா குழுமத்திற்கு விற்றிருந்தது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த கெய்ர்ன் எனெர்ஜி நிறுவனம், இந்தியா-பிரிட்டன் முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழும், வேதாந்தா நிறுவனம் இந்தியா-சிங்கப்பூர் முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழும் வரும் என சர்வதேச தீர்ப்பாயத்தை நாடியது.
இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக பாவிப்பது ‘நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை’ என்று இந்தியா தீர்பாயத்துக்குச் சென்றது. இந்த வழக்கை ஜெனீவாவைச் சேர்ந்த நீதிபதி லாரெண்ட் லெவி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.
இந்தியா முன் தேதியிட்டு வரிவிதிப்பு மேற்கொண்டதால் இந்திய அரசு 560 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கெய்ர்ன் வழக்கு தொடர்ந்ததுடன், இந்தியா-இங்கிலாந்து இடையே வரி விதிப்பு ஒப்பந்தம் உள்ளது என்றும், அந்த வகையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றும் கெய்ர்ன் குறிப்பிட்டது.
இந்தியா காலதாமதம்
ஆனால் இந்தியாவின் இந்த மனுக்கள் வழக்கை தாமதப்படுத்தும் உத்தி என்று பார்க்கப்படுகிறது. கெய்ர்ன் எனர்ஜி கோரிய இழப்பீடுக்கு எதிரான அறிக்கையை இந்தியா நவம்பர் 11, 2016க்குள் தாக்கல் செய்யவில்லை. பிறகு ஜனவரி மாதம்வரை காலக்கெடுவை தீர்பாயம் நீட்டித்தது. ஆனால் இந்தக் காலக்கெடுவையும் இந்தியா தாண்டி பிப்ரவரி 4-ம் தேதிதான் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த விஷயத்தில் இந்திய அரசு காலதாமதம் செய்ததற்கான காரணங்கள் தெரியவில்லை. இந்நிலையில் பிப்ரவரியில் இந்தியா தன் தரப்பு வாதங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ததற்கு கெய்ர்ன் எனர்ஜி, ஜூன் மாதம் மத்தியில் பதில் அளிக்க வேண்டும். கெய்ர்ன் எனர்ஜியின் அறிக்கைக்கு பதில் அறிக்கையை அளிக்க இந்திய அரசுக்கு செப்டம்பர்/அக்டோபர் வரை கால அவகாசம் கிடைக்கும். அதன் பிறகே சாட்சியங்கள் தரப்பு விசாரணை தொடங்கும். அடுத்த சிலமாதங்களில் இந்த வழக்கு முடிந்து விடும். இதில் இந்தியத் தரப்பு வாதம் எடுபடுகிறதா, அல்லது கெய்ர்ன் வெற்றி பெறுமா என்பது பிறகு தெரியவரும்.
ஆனால் சர்வதேச தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பு இறுதியானது. இதன் தீர்ப்பை வேறு எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆனால் இந்த இரண்டு வழக்குகளையும் தொடர்வதற்கான முடிவை மேற்கொண்டது இந்திய அரசுதான் என்பதால், இந்த வழக்கிலிருந்து பின் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் இந்தியா தன் தரப்பு வாதங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ததற்கு கெய்ர்ன் எனர்ஜி, ஜூன் மாதம் மத்தியில் பதில் அளிக்க வேண்டும்.