குறிப்பிட்ட முறைக்கு மேல் ரொக்கப்பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம் விதிக் கப்படும் என்று அறிவித்துள்ளதை எஸ்பிஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல், வங்கிக் கிளைகளில் ரொக்க பணப் பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கிகள் ஒரு சில தினங்களுக்கு முன்பு அறிவித் தன. மேலும் வங்கிக் கிளைகளில் ஒரு மாதத்தில் 4 இலவச ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு டெபாசிட்டுக் கும், திரும்ப எடுக்கும் தொகைக் கும் ரூ.150 கட்டணமாக வசூலிக் கப்படும் என்று அறிவித்தன.
அபராதம் விதிக்கப்படும் என்று எடுத்துள்ள முடிவு குறித்து இந்த இரு வங்கிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சில தினங்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்திருந்தது.
எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த முடிவை பாரத ஸ்டேட் வங்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.