வணிகம்

வெங்காய விலை அதிகரிப்பு: பதுக்கலைக் கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

செயற்கைத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் வெங்காய விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த மத்திய அரசு, பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாகவே வெங்காய விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, டெல்லியில் சில்லறை வர்த்தகத்தில் கிலோவுக்கு ரூ.80-ல் இருந்து ரூ.100 வரை விற்கப்படுகிறது.

வெங்காயம் விலை மீண்டும் அதிகரித்துள்ளதற்கு, செயற்கை முறையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே காரணம் என்றும், பதுக்கல்களின் காரணமாகவே இந்த அளவுக்கு விலையேற்றம் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டில் போதுமான அளவில் வெங்காயம் இருப்பு உள்ளது. வெங்காயம் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம், செயற்கையாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்கி, விலையேற்றத்தை வெகுவாகத் தடுக்க முடியும். டிசம்பரில் அறுவடை என்பதால், அம்மாத இறுதியில் வெங்காய விலை சீராகும்” என்றார்.

வெங்காய ஏற்றுமதிக்குத் தடை?

டெல்லி மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதன் மூலம் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT