பங்குச்சந்தை குறியீடுகள் இன்று (வியாழக்கிழமை) சரிவில் முடிவடைந்திருந்தாலும், வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் மூன்று வருட உச்சபட்ச புள்ளிகளைத் தொட்டது.
பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிவுடன் 20,725 புள்ளிகளில் வியாழன் வர்த்தகத்தை முடித்தது. ஆனால், இடையே 21,039 புள்ளிகள் வரை சென்றது.
இதற்கு முன்பு நவம்பர் மாதம் 8-ம் தேதிதான் சென்செக்ஸ் 21,000 புள்ளிகளுக்கு மேலே சென்றது. 21,206 என்பது சென்செக்ஸின் உச்சபட்ச புள்ளி. இந்த நிலையை ஜனவரி 2008 அன்று சென்செக்ஸ் அடைந்தது.
அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து 14வது நாளாக இந்திய சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வரும் தீபாவளிக்குள் புதிய உச்சத்தை தொடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இப்போதைக்கு ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கையைத்தான் பங்குச்சந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த வருடத்தில் ஐ.டி. துறை பங்குகள்தான் 44 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஆனால் பங்குச் சந்தைகள் 4 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. முதலீட்டாளர்கள் ஐ.டி. துறை பங்குகளில் லாபத்தை பதிவு செய்த காரணத்தால் அந்தத் துறை பங்குகள் கடுமையாக சரிந்தன.
இதனிடையே, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி வர்த்தக முடிவில், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 6,164 ஆக இருந்தது.