வங்கித் துறையில் அதிக இணைப்பு நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நீண்டகால அடிப்படையில் ஐந்து வங்கிகள் மட்டுமே நிலைத்திருக்கும் என கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவர் உதய் கோடக் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் மூன்று முதல் ஐந்து வங்கிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதே போன்ற ஒரு நிலைதான் இந்தியாவிலும் இருக்கும். இதில் மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் எந்த வங்கி நிலைத்திருக்கும் என்னும் பட்டியலை இப்போது கூறமுடியாது. ஆனால் நிலைத்திருக்கும் வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கும். மீதம் யார் இருப்பார்கள் என தெரியாது. ஒவ்வொருவரும் அந்தப் பட்டிய லில் இருப்பதற்கன பணிகளைச் செய்து வருகிறோம்.
கோடக் மஹிந்திரா வங்கி மற்ற வங்கிகளைக் கையகப்படுத்த கவனம் செலுத்தி வருவது உண்மைதான். இப்போதைக்கு இதைத் தவிர சொல்வதற்கு ஏதும் இல்லை. ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை இணைத்துவிட்டோம். ஆனாலும் நாங்கள் சோர்வடையவில்லை. இந்த இணைப்பில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அதற்காக உடனடியாக அடுத்த வங்கியை இணைக்கிறோம் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. வங்கிகளைக் கையகப்படுத்தும் விஷயத்தில் திறந்த மனதுடன், தயாராக இருக்கிறோம்.
வரும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று உதய் கோடக் கூறினார்.
5,300 கோடி ரூபாய் நிதி திரட்ட கோடக் மஹிந்திரா வங்கியின் இயக்குநர் குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. நிறுவனங்களின் 3.3 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் இந்த நிதி திரப்பட்டுகிறது. வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட புதிய விஷயங்களுக்காக இந்த நிதி திரட்டல் நடவடிக்கை செய்யப்படுவதாக வங்கி அறிவித்தது.