வணிகம்

மின் பற்றாக்குறை 4.2% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

நாட்டின் மின்சார பற்றாக்குறை டிசம்பர் மாதம் 4.2 சதவீதமாக அதிகரித்தது. மொத்த பற்றாக்குறை அளவு 5,547 மெகாவாட் என மத்திய மின் ஆணையம் (சிஇஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் நாட்டின் மின் தேவை 1,32,786 மெகாவாட்டாகும். இதில் 1,27,239 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மின் தட்டுப்பாடு அதிகபட்சமாக 3.7 சதவீதமாக இருந்தது. பற்றாக்குறை அளவு 4,803 மெகாவாட்டாகும். மின்தேவை அதிகரித்து வரும் நிலையில் அதை பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் நீர் மின் நிலையங்கள்தான்.

மேலும் காற்றாலை மின்னுற் பத்தியும் குறைந்துபோனதால் பற்றாக்குறை அதிகரித்ததாக சிஇஏ தெரிவித்துள்ளது.வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக மின்னுற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததாக தெரியவந்துள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களில் பற்றாக்குறை அளவு 7.1 சதவீதமாக இருந்தது. இப்பகுதியில் பற்றாக்குறை அளவு 2,912 மெகாவாட்டாக இருந்தது. தேவையான மின்சாரம் 40,812 மெகாவாட்டாகும். ஆனால் உற்பத்தியானதோ 37,900 மெகாவாட்டாகும்.

வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம் ஆகியவற்றில் பற்றாக்குறை 5.9 சதவீத அளவுக்கு இருந்தது. இப்பிராந்தியத் தேவை 2,009 மெகாவாட்டாக இருந்த போதிலும் உற்பத்தியானதோ 1,890 மெகாவாட் மட்டுமே.

நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் மின் தட்டுப்பாடு 1.5 சதவீத அளவுக்கு இருந்தது. மேற்கு வங்காளம், ஒடிசா, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் மின் தேவை டிசம்பர் மாதம் 13,814 மெகாவாட்டாகும். ஆனால் உற்பத்தியானதோ வெறும் 13,604 மெகாவாட் மட்டுமே. நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் மின் பற்றாக்குறை 2.5 சதவீத அளவுக்கு இருந்தது. இப்பகுதியில் தட்டுப்பாடு 1,031 மெகாவாட்டாகும்.

தென் மாநிலங்களில் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறை 3.7 சதவீத அளவுக்கு இருந்தது. அதாவது பற்றாக்குறை 1,275 மெகாவாட்டாகும். மின் தேவை 34,816 மெகாவாட்டாகும்.

SCROLL FOR NEXT