கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துவரும் விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு தொடர்ந்து கட்டணத்தில் தள்ளுபடி அளித்து வருகின்றன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன்னுடைய அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் டிக்கெட் கட்டணத்தில் 30 சதவீத தள்ளுபடி வழங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட தள்ளுபடி வரும் பிப்ரவரி 2-ம் தேதி வரைக்கும் அனைத்து உள்நாட்டு விமானங்களுக்கும் பொருந்தும்.
அதாவது வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரைக்கும் விமானத்தில் செல்வதற்கு வரும் 2-ம் தேதிக்குள் டிக்கட் பதிவு செய்யும் பட்சத்தில் இந்த கட்டண சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் முதல் கட்டமாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் வரைக்கும் தள்ளுபடி செய்தது ஸ்பைஸ் ஜெட். இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கொடுக்க ஆரம்பித்துள்ளன.
இது வாடிக்கையாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் இருவருக்குமே வெற்றி என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சி.ஓ.ஓ.) சஞ்சீவ் கபூர் தெரிவித்தார். மேலும் இது போன்ற சீசன் அல்லாத சமயத்தில் பயணிகளை ஊக்குவிப்பதற்கு இதுபோன்ற தள்ளுபடி நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மும்பை டெல்லி இடையே ஸ்பாட் கட்டணம் ரூ.10,098 . ஆனால் இந்த தள்ளுபடி மூலம் செல்லும் போது 3,617 ரூபாய்க்கு செல்ல முடியும்.