வணிகம்

காலாண்டு முடிவுகள்: எம்ஆர்பிஎல், மேரிகோ, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், என்டிபிசி

செய்திப்பிரிவு

எம்ஆர்பிஎல் லாபம் 80% சரிவு

மங்களூர் ரீபைனரீஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் (எம்ஆர்பிஎல்) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதை விட 80 சதவீதம் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வருமானம் குறைந்ததே லாபம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் லாபம் ரூ.. 236 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.. 1,185 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.. 19,554 கோடியைத் தொட்டது. ஏற்றுமதி 38 சதவீதம் அதிகரித்தது. வெளிநாட்டு விற்பனை வருமானம் ரூ. 10,288 கோடியாகும். முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 7,474 கோடி.

மேரிகோ லாபம் ரூ.105.86 கோடி

அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மேரிகா லிமிடெட் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 105.86 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தைவிட 23 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.. 85.87 கோடியாக இருந்தது.

லாபம் அதிகரித்த போதிலும் நிறுவனத்தின் விற்பனை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் குறைவாகும். விற்பனை வருமானம் ரூ. 1,115.36 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய விற்பனை வருமானம் ரூ.1,155.89 கோடியாகும். நிறுவன செலவு காலாண்டில் ரூ. 966.68 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் செலவு 1,029 கோடியாகும்.

இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 0.75 ரூபாய் வழங்கி இருக்கிறது.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் லாபம் ரூ. 351 கோடி

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ரூ.351.93 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட இது குறைவாகும். கடந்த ஆண்டு நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 362.57 கோடியாகும்.

நிறுவனத்தின் வருமானம் ரூ.. 2,100.44 கோடியாகும். முந்தைய ஆண்டு இதேகாலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.. 1,708.20 கோடியாக இருந்தது.

முதல் அரையாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.. 718.20 கோடியாகும். நிறுவன இயக்குநர் குழு, முதலீட்டாளர்களுக்கு 30 சதவீதம் அதாவது ஒரு பங்குக்கு ரூ. 3 ஈவுத் தொகை வழங்க முடிவு செய்தது. ஈவுத் தொகைக்கு நிறுவனம் செலவிடும் தொகை ரூ. 79.63 கோடியாகும்.

வர்த்தகத்தின் முடிவில் 2 சதவிகித அளவுக்கு இந்த பங்கு உயர்ந்தது. 573 ரூபாயில் முடிவடைந்தது.

என்டிபிசி லாபம் 21% சரிவு

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசியின் இரண்டாம் காலாண்டு லாபம் 21 சதவீதம் சரிந்துள்ளது. நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 2,492 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 3,142 கோடியாகும்.

நிறுவனத்தின் வருமானம் ரூ. 17,170.90 கோடியிலிருந்து ரூ. 17,059 கோடியாகக் குறைந்தது. நிறுவனம் எரிபொருள் செலவுக்காக கடந்த காலாண்டில் ரூ.10,139 கோடி செலவிட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் செலவிட்ட தொகை ரூ. 9,932 கோடியாகும்.

நாட்டிலேயே அதிக அளவு மின்னுற்பத்தி செய்யும் என்டிபிசி நடப்பு நிதி ஆண்டில் ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்தது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு சதவிகித அளவுக்கு இந்த பங்கு உயர்ந்தது.

SCROLL FOR NEXT