சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய ரக தயாரிப்பான எஸ்-கிளாஸ் காரை டெல்லியில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எபர்ஹார்ட் கெர்ன் அறிமுகப்படுத்தினார். இதன் விலை ரூ. 1.57 கோடியாகும்.
இந்தியச் சந்தையில் மிகச் சிறந்த கார்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட எஸ் கிளாஸ் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொகுசு, வடிவமைப்பு, உயர் தொழில்நுட்பம், சர்வதேச தரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக எஸ் கிளாஸ் திகழும் என்று அவர் மேலும் கூறினார்.
இது 4.6 லிட்டர் வி8 ரக என்ஜினைக் கொண்டதோடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தில் செயல்படக் கூடியது. ஜீரோ நிலையிலிருந்து 100 கி.மீ. வேகத்தை 4.8 விநாடிகளில் தொட்டுவிடக் கூடிய அளவுக்கு சீறிப்பாயும். இதில் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லலாம். இந்த காருக்கு ஏற்கெனவே 125 பேர் முன் பதிவு செய்துள்ளதாகவும், புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நகரும் அலுவலகம் போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மடக்கக்கூடிய வகையிலான டேபிள், தனிநபர் பொழுது போக்கு அம்சங்கள், 12 வோல்ட் பவர் சாக்கெட் மற்றும் வயர்லெஸ் ஹாட் ஸ்பாட் ஆகியன இதில் உள்ளது சிறப்பம்சமாகும். ஆன்ட்ராய்ட் தளத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் டச் அப்ளிகேஷன் மூலம் இந்தக் காரின் சில பகுதிகளை இயக்க முடியும்.