கோடிக் கணக்கான செல்வம் சேர்ப்பதற்குப் பெருமளவில் துணிச்சலும், கவனமும் தேவை; அந்தப் பணத்தை இழக்காமல் காப்பாற்றுவதற்கு, அதைவிடப் பத்து மடங்கு புத்திசாலித்தனம் வேண்டும்
எங்கள் வாரிசுகள் தங்களுடைய ஆத்மா, இதயம், உடல் ஆகிய அத்தனையையும் பிசினஸுக்கு அர்ப்பணிக்கவேண்டும். -ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் சித்தாந்தம்.
நீங்கள் தொழில் தொடங்குகிறீர்கள். நமக்குப் பிறகும் தொழில் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்பது உங்கள் ஆசை. ஆனால், இந்தக் கனவு நிஜமாவது சிரமம் என்கின்றன ஆய்வுகள். முதல் தலைமுறையைத் தாண்டி, அடுத்த தலைமுறையில் 60 சதவீத தொழில்களே தாக்குப் பிடிக்கின்றன. மூன்றாம் தலைமுறை வரும்போது 10 சதவீத நிறுவனங்களே நிலைக்கின்றன. நான்காம் தலைமுறையில் லட்சத்துக்கு ஒன்று மிஞ்சினாலே ஆச்சரியம்.
பல்லாண்டுகளுக்கு முன்னால் சக்கைப்போடு போட்ட டாடா, முருகப்பா குழுமம், டி. வி. எஸ் ஆகியோர் மட்டுமே இப்போதும் சேதப்படாமல் மிஞ்சியிருக்கிறார்கள். பல குடும்ப நிறுவனங்கள் பண, பதவி, அதிகார, ஈகோ ஆசைகளால் ரத்தபந்த உறவுகள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.
ஆனால் ரோத்ஸ்சைல்ட் அன்ட் சன்ஸ் என்னும் ஜெர்மன் குடும்ப நிறுவனம் 453 ஆண்டுகளாக, ஏழு தலைமுறை தாண்டி ஒற்றுமையாக, வெற்றிகரமாக நடந்துவருகிறது. இந்த ஆச்சரியத்தின் சூத்திரதாரி, குழும நிறுவனர், மேயர் ஆம்ஷெல் ரோத்ஸ்சைல்ட்.
14 முதல் 18 நூற்றாண்டு வரையி லான காலகட்டம். ஜெர்மனியில் யூதர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட் டார்கள். நகரின் பிரதான பகுதிகளில் அவர்கள் நுழையக்கூடாது. உயர் இனத்தவரின் சிறுவர்களை பார்த்தாலும் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்த வேண்டும்.
பிராங்க்பர்ட் நகரில் அப்படியான யூத பெற்றோருக்கு நான்காவதாக பிறந்தவன் ஆம்ஷெல். எட்டு உடன் பிறப்புகள். ஆம்ஷெலின் அப்பாவுக்கு துணி வியாபாரம், கழுதையின்மேல் துணிமூட்டைகளை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்து வருவார். நான்கு வயதில் பள்ளிக்கு சென்றவனுக்கு படிப்பைப் பாதியில் விடவேண்டிய கட்டாயம். பத்து வயதாகும்போது, அப்பாவோடு வியாபாரத்துக்குப் போகத் தொடங்கினான். அப்படி போகிறபோது ஜெர்மனியில் புழங்கிய பழைய நாணயங்களை குப்பைகளிலிருந்து பொறுக்கி சேகரிப்பது ஆம்ஷெலின் பழக்கம். ஜெர்மனியில் பல குறுநில மன்னர்களின் ஆட்சி அடிக்கடி மாறும். அப்படி மாறுகிறபோது பழைய நாணயங்களை குப்பைகளில் கொட்டிவிட்டு புதிய நாணயங்களுக்கு மாறுவார்கள். விளையாட்டாக ஆம்ஷெல் இதை சேகரித்து வந்தான்.
ஆம்ஷெலின் பதினொன்றாம் வயதில் அம்மா, அப்பா இருவரும் அம்மை நோயால் அகால மரணமடைந்தார்கள். தவித்த எட்டு குழந்தைகளையும் உறவினர்கள் பாதுகாத்தனர். ஆம்ஷெல் ஓப்பன்ஹீமர் வங்கியில் எடுபிடி வேலைக்குச் சேர்க்கப்பட்டான்.
13 வயதில் அவனது சுறுசுறுப்பும், கற்பூர புத்தியும் முதலாளியைக் கவர்ந்தன. வங்கியின் முக்கிய தொழிலான அந்நியச் செலாவணி பணப் பரிவர்த்தனையின் நுணுக்கங்களை கற்றுத் தந்தார். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக சேவை செய்தான் ஆம்ஷெல். வான் எஸ்டார்ஃப் என்னும் ராணுவத் தளபதி இதனால் ஆம்ஷெலிடம் தனிப் பாசம் வைத்தார்.
18 வயது. தீண்டப்பட்டவனாகத் தன்னைச் சமுதாயம் நடத்துவதை ஆம்ஷெல் வெறுத்தார். இதை மாற்றும் ஒரே சக்தி பணம் மட்டும் தான் என்னும் முடிவுக்கு வந்தார். வேலையிலிருந்து அத்தனை பணம் சேர்க்கவே முடியாது. ஒரே வழி, சொந்த தொழில்தான். அந்நியச் செலாவணி, அரிய நாண யங்கள், தொல்பொருட்கள் ஆகியவற்றை வாங்கி, விற்கும் தொழில் தொடங்கினார்.
அன்றைய பிராங்க்பர்ட் நகர மன்னர் வில்லியம் அரிய நாண யங்களின் சேகரிப்பாளர். வான் எஸ்டார்ஃப் தன் செல்லப் பிள்ளையை அரசருக்கு அறி முகம் செய்துவைத்தார். தனக்கு முன்னால் தங்கச் சுரங்கம் திறக்கிறது, வாழ்க்கையில் வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும், புத்திசாலி அதை நழுவவிடமாட்டான் என்று ஆம்ஷெலின் உள்ளுணர்வு சொன்னது. இப்போது அவர் கடைப்பிடித்த அற்புத யுக்தி கோடீச்வர ராஜபாட்டையில் முதலடி எடுக்கவைத்தது. ஆம்ஷெல் ஏற்கெனவே சேகரித்த பழைய நாணயங்களை அடிமாட்டு விலைக்கு அரசருக்குத் தந்தார் இன்றைய அதிக லாபத்தைவிட அரசரின் தொடர்பு தனக்கு உதவும் என்னும் தொலைநோக்கு.
ஆம்ஷெல் வைத்த குறி தப்பவில்லை. இளவரசர் தொடர் வாடிக்கையாளரானார். அரசாங்கத்தின் நிதி ஏஜெண்டாக நியமித்தார். இதனால், உயர் நிலையில் உள்ளோர், பிற குறுநில மன்னர்கள் ஆகியோரின் தொழில் கிடைத்தது. கணிசமான வருமானம் வரத் தொடங்கியது. ஆனால், இது மட்டுமே ஆம்ஷெலுக்கு போதவில்லை மன்னர், ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பல நூறு கோடிகளுக்குத் தங்கம் வாங்கிக் கொண்டிருந்தார். இன்னும் ஏராளமான பிரம்மாண்ட முதலீடுகள். இதில் எப்படியாவது ஒரு பங்கைப் பெறவேண்டும்.
ஆம்ஷெல் முயற்சிகளைத் தொடங்கினார். அவரிடம் ஒரு குணம், இலக்கை நிர்ணயித்துவிட்டால், ஜெயிக்கும்வரை விடமாட்டார். மன்னர் விஷயத்தில் இந்த முயற்சி எத்தனை நாட்கள் எடுத்தது தெரியுமா? இருபது வருடங்கள்!
இருபத்து ஒன்றாவது வருடத்தில் மன்னர் கார்ல் என்கிற இளைஞனை புதிய நிதி ஆலோசகராக நியமித் தார். ஆம்ஷெல் அவரைத் தன் நண்பராக் கிக்கொண்டார். இதன் மூலம் இளவர சரின் சின்னச் சின்ன முதலீடுகள் கிடைத் தன. பிறகு அரசாங்க முதலீடுகள் அத் தனையும் ஆம்ஷெலின் ரோத்ஸ்சைல்ட் நிறுவனம் வசம் வரத் தொடங்கியது. ஆம்ஷெல், இளவரசர் பணத்தைத் தன் பெயரில் குறு கிய கால முதலீடு செய்தார். கொழுத்த லாபம். கிடைத்த லாபத்தை கார்ல் ஸோடு பங்கு போட்டுக்கொண்டார். அதே சமயத்தில் மன்னர் அதுவரை இளவரசர் பார்த்தேயிராத லாபத்தையும் காட்டினார்.பணம் கொட்டியது.
கோடிக் கணக்கான செல்வம் சேர்ப்பதற்குப் பெருமளவில் துணிச் சலும், கவனமும் தேவை; அந்தப் பணத்தை இழக்காமல் காப்பாற் றுவதற்கு, அதைவிடப் பத்து மடங்கு புத்திசாலித்தனம் வேண்டும் என்பது ஆம்ஷெல் கொள்கை. ரோத்ஸ்சைல்ட் குழுமத்தைக் காலவெள்ளத்தை எதிர்கொள்ளும் சக்தியாக்கவேண்டும், இதற்காக, ஆம்ஷெல் தன் ஐந்து மகன்களுக்கும் ஆஸ்திரியா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தனித்தனி வங்கிகளை உருவாக்கினார். இவர் நிர்வாகத்தில் மற்றவர்கள் யாரும் தலையிடக்கூடாது.
ஆனால், மொத்த லாபத்தில் ஐவருக்கும் பங்கு உண்டு. ஏதாவது ஒரு நிறுவனத்துக்குப் பிரச்சினை வந்தால், மற்றவர்கள் அத்தனை பேரும் எல்லா உதவிகளும் தந்து, தீர்வு காண உதவ வேண்டும்.
விரைவில், ரோத்ஸ்சைல்ட் வங்கியிடம் அமெரிக்கா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, எகிப்து, கிரீஸ் பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம் என உலகின் அத்தனை நாடுகளும் கடன் வாங்கின.
இன்று, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (Interntional Monetary Fund) ஆகிய அமைப்புகளின் வரத்தால், வளர்ச்சியால், நாடுகளுக்குக் கடன் தரும் துறையில் ரோத்ஸ்சைல்ட் இல்லை. ஆனால், நிறுவனங்களை வாங்குதல் விற்றல், சுரங்கத் தொழில், சுற்றுலா, ஒயின் தயாரிப்பு ஆகியவற்றில் வெற்றிகரமாகச் செயல்படுகிறார்கள். இன்றும், அவர்களுக்கு வழிகாட்டு பவை ஆம்ஷெலின் கொள்கைகள் தாம்.
slvmoorthy@gmail.com