வணிகம்

சென்னை மக்களிடம் தங்கத்தின் மவுசு குறைகிறது

எல்.ரேணுகா தேவி

சென்னை மக்களுக்கு தங்கத்தின் மீதான மவுசு குறைந்து வருகிறது. இதனால் நகை வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து மெட்ராஸ் தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாபு இமானுவேல் 'தி இந்து' நிருபரிடம் கூறுகையில், "தங்கம் வாங்குபவர்களில் 50 சதவீதம் பேர் அதில் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை. பொது மக்கள் தங்கத்தின் விலை குறையும் போது வாங்கி கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளதால் தங்கம் வாங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது. அப்படியே குறைந்தாலும் அது இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகக் காத்திருக்கும் நிலையில் மக்கள் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 23,000 ரூபாயாகவும் பின்னர் மாதத்தின் முடிவில் 22 ,872 ரூபாயாக இருந்தது. பின்னர் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழே இறங்கிய தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இப்போது 22,920 ரூபாயாக இருக்கிறது.

"தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படும் அட்சய திருதியை போன்ற நாட்களிலும் நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. சம்பிரதாயத்திற்காக தங்கம் வாங்க வேண்டும் என்பவர்கள்கூட ஒரு குறைந்த அளவு தங்கத்தைத்தான் வாங்குகிறார்கள்" என்று தனியார் நகைக்கடையில் பணி புரியும் தள மேலாளர் ஒருவர் கூறினார்.

தங்கத்தின் விலை குறையும் போது வாங்கி கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளதால் தங்கம் வாங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT