வணிகம்

நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது: நிதித்துறைச் செயலர் க.சண்முகம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை நிலை கட்டுக்குள் இருப்பதாக நிதித்துறைச் செயலர் க. சண்முகம் தெரிவித்தார். மாநில சட்டப் பேரவையில் நேற்று நிதி அமைச்சர் டி. ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, அதன் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிய அவர் மேலும் கூறிய தாவது:

மாநில அரசின் வரி வருமானம் ரூ.1,59,362 கோடியாகும். செலவு ரூ.1,75,293 கோடி யாகும். இதனால் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாகும். அரசின் செலவு அதிகரித் ததற்கு மின் பகிர்மான நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.22,815 கோடியை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது முக்கிய காரணமாகும். இதனால் அரசின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் வறுமை ஒழிப்பு, கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதி திட்டம், நீர் வளத்தை பெருக்குவது, சுகா தார திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகளுக் கான ஒதுக்கீடு ரூ.72 ஆயிரம் கோடியாகும்.

குடி மராமத்து பணி மற்றும் பசுமை சூழல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் உதவியோடு திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக் கீடு ரூ.1,795 கோடியாகும். தொழில், முதலீடுகளை ஊக்குவிக்க இது உதவும்.

வறுமை ஒழிப்பின் புத்தாக்க நடவ டிக்கைக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. நீர்வள மேம்பாட்டுத் திட்டங் களுக்கான ஒதுக்கீடு ரூ. 3,042 கோடியாகும். கடந்த ஆண்டு இத்திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் இந்த நிதி ஆண்டில் 35 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிலுவை

மாநில அரசு செயல்படுத்தும் மத்திய அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை உடனடியாக வழங்கவில்லை. சர்வ சிக்�ஷ அபியான், பேரிடர் மேலாண்மை, கிராம சாலை திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.6 ஆயிரம் கோடி வரை நிலுவை உள்ளது. இத்தொகை கிடைத்தால் அரசின் பற்றாக்குறை குறையும்.

பொதுவாக பற்றாக்குறை அளவு மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத அளவுக்குக் குறைவாக இருந்தால் நிதி மேலாண்மை சிறப்பாக இருப்பதாக அர்த்தம்.

2017-18-ம் நிதி ஆண்டில் மாநிலத்தின் பற்றாக்குறை 4.58 சதவீதம் என திருத்திய மதிப்பீடு கணித்துள்ளது. மத்திய அரசின் நிலுவை பாக்கி கிடைக்கும்போது இந்த அளவு குறையும்.

டாஸ்மாக் வருமானம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப் படியாக மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. 500 கடைகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி மொத்தம் 1,500 கடைகள் மூடப்படுகின்றன. இதனால் அரசின் வருவாய் இழப்பு ரூ.2,100 கோடியாக இருக்கும்.

வரி வருவாய் குறைந்தது ஏன்?

மாநிலத்தில் வரி வருமானம் குறைந் துள்ளது. இதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் ஒரு காரணம். அதேசமயம் முத்திரைத் தாள், பதிவுக் கட்டணம் போன்ற வருமானங்கள் குறைந்துள்ளன. நிலம் பதிவு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவும் இதற்கு ஒரு காரணமாகும். இதற்கு தீர்வு காணும் முயற்சியை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டப்பட்ட வரி 2014-15-ம் ஆண்டுக்குப் பிறகு உயர்த்தப்படவேயில்லை. சமீபத்தில் உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.46,328 கோடி. ஓய்வூதியம் ரூ.26,527 கோடி. 7-வது ஊதியக்குழு பரிந்துரைக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு இதற்கான ஒதுக்கீடு குறித்து ஆராயப்படும்.

பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவும் போது திட்டப் பணிகளை நிதிப்பற்றாக்குறை காரணமாக செயல்படுத்தாமல் இருக்க முடியாது. இதற்காக திட்டப் பணிகளை கடன் பெற்றாவது செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் நிலைமை சீரடையும்போது வளர்ச்சியை எட்ட முடியும். கடன் தொகை அதிகரித்துள்ளது என்பதை மட்டும் பார்க்கக் கூடாது, அதை திரும்ப செலுத்தும் அளவுக்கு வருமானங்கள் உள்ளதா என்பதை பல்வேறு அளவீடுகள் கொண்டு நிர்ணயிக்கலாம். அந்த வகையில் மாநில அரசின் நிதி நிலை திருப்திகரமாகவே உள்ளது என்றார் சண்முகம்.

SCROLL FOR NEXT