வணிகம்

டாடா குழுமத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவின் முக்கியமான பிஸினஸ் குழுமமான டாடா குழுமத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்.ஐ.ஐ.) தங்களது பங்கினை அதிகரித்திருக்கிறார்கள். டாடா குழுமத்தில் இருக்கும் முக்கியமான 16-ல் 13 நிறுவனங்களில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு, நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் அதிகரித்திருக்கிறது.

டாடா குழுமத்தில் இருக்கும் முக்கியமான நிறுவனங்களான டி.சி.எஸ்., டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் ஆகிய நிறுவனங்களில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது பங்கினை அதிகரித்திருக்கிறார்கள்.

டி.சி.எஸ் நிறுவனத்தில் ஜூன் காலாண்டில் 15.67 சதவிகிதம் மட்டுமே அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு இருந்தது. ஆனால் நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் 16.09 சதவிகிதமாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்திருக்கிறது.

அதே போல, டாடா மோட்டார்ஸில் ஜூன் காலாண்டில் 26.59 சதவிகிதமாக இருந்த அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு, செப்டம்பர் காலாண்டில் 26.76 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. டாடா ஸ்டீலில் ஜூன் காலாண்டில் 13.20 சதவிகிதமாக இருந்த அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு, செப்டம்பர் காலாண்டில் 13.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

டாடா பவரில் ஜூன் காலாண்டில் 24.78 சதவிகிதமாக இருந்த அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு, செப்டம்பர் காலாண்டில் 25.05 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதுதவிர டாடா கெமிக்கல்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா எலெக்ஸி, டிரென்ட், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா குளோபல், ராலிஸ் இந்தியா மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனங்களில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து இருக்கிறது.

’’டாடா குழுமம் பெரும்பாலான பிஸினஸ்களில் ஈடுபட்டிருக்கிறது. மேலும் டாடா குழுமத்துக்கு இந்தியாவில் நல்ல பெயர் இருக்கிறது. அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் டாடா குழுமத்தை விட்டு விட முடியாது என்று ஆக்மெண்ட் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் கஜேந்திர நாக்பால் தெரிவித்தார்.

அதே சமயத்தில் டாடா ஸ்பாஞ், டாடா மெட்டாலிக்ஸ் மற்றும் வோல்டாஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தங்கது பங்கினை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வோல்டாஸ் நிறுவனத்தில் கடந்த ஜூன் காலாண்டில் 18.12 சதவிகிதமாக இருந்த அன்னிய முதலீட்டார்களின் பங்கு, கடந்த செப்டம்பர் காலாண்டில் 14.47 சதவிகிதமாக குறைந்துவிட்டார்கள்.

100 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகித வருமானம் வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது.

SCROLL FOR NEXT