அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசியின் அளவு அதிகரித்துள்ளது. 2012-13-ம் வர்த்தக ஆண்டில் 1.10 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (வர்த்தக ஆண்டு என்பது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும்). இந்த புள்ளி விவரத்தை அமெரிக்க வேளாண் துறை (யுஎஸ்டிஏ) வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2011-12-ம் ஆண்டில் 1 கோடி டன் அரிசி ஏற்றுமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது கூடுதலாக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டுக்கு அரிசி இறக்குமதி அளவை யுஎஸ்டிஏ 93 லட்சம் டன்னிலிருந்து 1.10 கோடி டன்னாக உயர்த்தியுள்ளது.
பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத பிற ரகங்களுக்கும் அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உள்ளது. வரும் ஆண்டில் அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ்மதி அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் பாஸ்மதி அல்லாத பிற ரகங்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதற்கு உள்நாட்டுத் தேவை அதிகமாக இருந்ததே முக்கியக் காரணமாகும். உணவுப் பணவீக்கம் அதிகரித்து வருவதால் விலையைக் கட்டுப்படுத்த அரசு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
அரிசி மீது நான்கு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி கட்டுப்பாடு 2011-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் 2012-ம் ஆண்டில் ஆசிய பிராந்தியத்தில் தாய்லாந்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் இந்தியா அரிசி ஏற்றுமதி செய்தது.
குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 43.5 லட்சம் ஹெக்டேரிலிருந்து 10.50 கோடி டன் அளவுக்கு அரிசி உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஒடிசா மற்றும் ஆந்திராவைத் தாக்கிய பைலின் புயல் காரணமாக வேளாண் உற்பத்தி இவ்விரு மாநிலங்களிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
ஆனால் மொத்த உற்பத்தி 2 சதவீத அளவுக்கே பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.