சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையை அமல்படுத்துவதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் அனைத்து வரிகளும் குறையும். மேலும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற ஐஎம்சியின் 9-வது வங்கிகள் மற்றும் நிதிச்சேவைகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை உருவாகும். தவிர மாநிலங்களுக்கு இடையே சரக்கு பரிமாற்றம் மற்றும் மாநிலங்களுக்குள் உள்ள சரக்கு பரிமாற்றம் தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும். மேலும் இந்தியாவில் இன்னும் சில காலங்களில் அனைத்து வரிகளும் குறையும்.
ஜிஎஸ்டி என்பது டிஜிட்டல் புரட்சியின் ஒருபகுதி. வரி அமைப்பில் உள்ள செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகளில் இதன் மூலம் மறுசீரமைப்பு செய்யமுடியும். இதன் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஐடி துறையில் வேலை இழப்பு மிகப் பெரிய தோற்றத்துடன் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த வேலை இழப்புகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் ஈடு செய்ய முடியும். தற்போது ஐடி துறை சந்தித்து வரும் சிக்கல்களால் ஐடி துறை
வளர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என்று உர்ஜித் படேல் கூறினார்.