இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லரி, ஆன்லைன் தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள கண்டேர் (Candere) நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஆன்லைன் விற்பனையில் கல்யாண் ஜூவல்லரி இறங்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
கண்டேர் நிறுவனத்தின் பிரிஜேஸ் சந்த்வானி, மற்றும் சுப்ரம் கபூர் ஆகியோரின் பங்குகளை முழு அளவில் கையகப்படுத்தியுள்ளது. கண்டேர் இணையதளத்தை சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட மேற்கு ஆசியா சந்தைக்கு விரிவுபடுத்துவதற்கு ஏற்ப இந்த கையகப்படுத்தல் பயன்படுத்தப்படும்.
முதல் முறையாக
கல்யாண் ஜூவல்லரி தனது வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்ப இந்த உத்தியை முதல்முறையாக மேற்கொண்டுள்ளது. தங்களது விற்பனை ஷோரும்கள் மற்றும் இணையதளம் இரண்டிலும் ஒரே நேரத்தில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கல்யாண் ஜுவல்லரியின் செயல் இயக்குநர் ராஜேஷ் கல்யாணராமன் கூறிய போது, கண்டேர் ஆன்லைன் இயங்குதளம் மிகச் சிறந்த நம்பகமாக வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த தளத்துக்கு திரும்ப திரும்ப வருகின்றனர். இது சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்ப தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் சர்வதேச பிராண்டாக உருவாக இந்த தளம் உதவும் என்று முடிவு செய்தோம் என்று கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆன்லைன் மூலமான விற்பனையில் 5 முதல் 7 சதவீத வளர்ச்சியை எட்டுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது சர்வதேச வருமானமும் அதிகரிக்கும் என்றார்.
2013ம் ஆண்டு கண்டேர் இணையதளம் ரூபேஷ் ஜெயினால் தொடங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் உள்நாட்டு ஆபரண நகை விற்பனையில் உள்ளது. இந்த இணையதளத்தில் சுமார் 4,000 வைர நகை டிசைன்கள் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்கள் விரும்பும் வகையில் உள்ளன. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெயினே தொடர்வார் என்று கல்யாண் ஜூவல்லரி தெரிவித்துள்ளது. தற்போதைய கண்டேர் என்கிற பிராண்ட் பெயரிலேயே ஆன்லைன் விற்பனை இருக்கும். ஆனால் ‘கல்யாண் ஜூவல்லரி வழங்கும்’ என்கிற பெயர் உடன் சேர்க்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லரி சர்வதேச முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 500 கோடி முதலீடு திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்யாண் ஜூவல்லரியில் வார்பர்க் பின்கஸ் இதுவரை ரூ.1,700 கோடி முதலீடு செய்திருக்கிறது.