வணிகம்

இளம் வயதினருக்கேற்ற முதலீட்டுத் திட்டம்

சொக்கலிங்கம் பழனியப்பன்

இளம் வயதினர் மற்றும் அதிக ரிஸ்க் எடுக்க முடியும் என நினைப்பவர்கள் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இவ்வகை ஃபண்டுகள் நாம் ஏற்கனவே பார்த்தது போல் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கின்றன.

நாம் சென்ற வாரம் லார்ஜ் கேப் ஃபண்டுகளை பொறுக்கி எடுப்பதற்காக கொடுத்த அதே வடிகட்டிகளை இவ்வகையான ஃபண்டுகளுக்கும் தாராளமாகப் பிரயோகிக்கலாம். உங்களுக்காக கீழே அட்டவணை 1-ல் சிறந்த மிட் அண்ட் ஸ்மால் கேப் திட்டங்கள் என நினைப்பனவற்றைக் கொடுத்துள்ளேன்.

இந்த மூன்று ஃபண்டுகளில் ஒன்று அல்லது இரண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்து கொள்ளலாம். நீண்ட கால நோக்கில், இவ்விதமான ஃபண்டு களில் ரிஸ்க் சற்று அதிகமாக இருந்தாலும் ரிவார்டு நன்றாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மைக்ரோ கேப் ஃபண்டுகளில் பொதுவாக முதன்முறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டாம். இதே சட்டம் துறை சார்ந்த, தீம் சார்ந்த மற்றும் ஓவர்ஸீஸ் ஃபண்டுகளுக்கும் பொருந்தும்.

இதுவரை நாம் 100% பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யக்கூடிய ஃபண்டுகளைப் பற்றி பார்த்தோம். இவை தவிர கலப்பின வகை (Hybrid) ஃபண்டுகளும் உள்ளன. கலப்பின வகை ஃபண்டுகள் ஒன்றிற்கு மேலான சொத்து வகைகளில் முதலீடு செய்கின்றன. உதாரணத்திற்கு பங்கு, கடன், தங்கம் போன்ற சொத்துகளில் கலவையாக முதலீடு செய்கின்றன.

தங்களுடைய போர்ட்போஃலி யோவில் 70% பங்குசார்ந்த முதலீட்டிலும் 30% கடன் சார்ந்த முதலீட்டிலும் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களை பேலன்ஸ்டு ஃபண்டுகள் (Balanced Funds) என்று குறிப்பிடுகிறோம். சற்றுக் குறைவாக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இவ்வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். முதன்முறை முதலீட்டாளர்களும் இவ்விதமான ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்டுகள் பொதுவாக அதிகமான தொகையை பங்குசார்ந்த முதலீட்டில் முதலீடு செய்வதால், இவ்வகை ஃபண்டுகளை ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருக்கும் பட்சத்தில் வரும் லாபத்திற்கு வருமான வரி ஏதும் கட்டத் தேவையில்லை. இவற்றில் நன்றாக செயல்படக்கூடிய சில திட்டங்களை அட்டவணை 2-ல் கொடுத்துள்ளோம்.

முதலீட்டாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஒன்று அல்லது இரண்டு ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து கொள்ளலாம்.

கலப்பினத் திட்டங்களில் எம்.ஐ.பி (MIP – Monthly Income Plan) என்று சொல்லக்கூடிய திட்டங்களும் உள்ளது. இவ்வகையான திட்டங்கள் அதிக பட்சமாக 30%-ஐ பங்குசார்ந்த முதலீடுகளிலும் மீதியை கடன் சார்ந்த உபகரணங்களிலும் முதலீடு செய்கின்றன. இவ்வகையான திட்டங்களில் பங்குசார்ந்த முதலீடுகள் குறைவாக இருப் பதால் ரிஸ்க்கும் குறைவு.

ஆதலால் ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் மற்றும் நீண்டகால ஃபிக்ஸட் டெபாஸிட்டுகளுக்கு ஒரு மாற்று உபகரணத்தை தேடுபவர்களுக்கு இவ்வகை ஃபண்டுகள் உகந்ததாகும். இவ்வகை ஃபண்டுகளில் கடன் சார்ந்த முதலீடுகள் அதிகமாக இருப்பதால், அவ்வகையான முதலீடுகளுக்கு உள்ள வருமான வரி இவ்வகையான ஃபண்டுகளுக்கும் உரித்தாகும். ஆனால் ஃபிக்ஸட் டெபாஸிட்டுகளை ஒப்பிடும் பொழுது, அதிக வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும். ஏனென்றால் அவர்களுக்கு வரி போக கையில் நிகராக கிடைக்கும் பணம் இவ்வகை முதலீடுகளில் அதிகமாகும்.

இவ்வகை முதலீடுகள் நீண்ட காலத்தில், ஆண்டிற்கு 10 - 12% வருமானத்தைத் தரவல்லது. குறுகிய கால முதலீட்டிற்கு இவ்வகையான திட்டங்களில் முதலீட்டாளர்கள் செல்ல வேண்டாம். இவ்வகையான திட்டங்களில் சில நல்ல ஃபண்டுகளை அட்டவணை 3-ல் கொடுத்துள்ளோம்.

மேற்கண்ட திட்டங்களில் ஓரிரண்டு ஃபண்டுகளைத் தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் இந்தியாவிற்கு வந்து செட்டிலாக விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வாறு திட்டமிட்டுக் கொள்ளலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன்- www.prakala.com

SCROLL FOR NEXT