எஸ்கார்ட்ஸ் நிகர லாபம் 33.5% உயர்வு
எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் முத லாவது காலாண்டு நிகர லாபம் 33.5% உயர்ந்து ரூ. 47 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.35.20 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 9.3% உயர்ந் துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.961.4 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வரு மானம் இந்த ஆண்டில் ரூ.1,051.40 கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங் களைப் பார்க்கிறபோது இனி வரும் காலங்களிலும் சந்தையின் தேவைக்கு ஏற்ப எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பருவ மழை சாதகமாக இருப்பதால் மத்திய அரசு விவசாயத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண் டும் என்று இந்த நிறுவனத்தின் தலைவர் ராஜன் நந்தா குறிப்பிட் டார். மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக பட்சமாக ரூ.266 வரையிலும் வர்த்தகமானது. வர்த்தகம் முடிவில் 2.45 சதவீதம் உயர்ந்து ரூ.259.20க்கு வர்த்தகம் முடிந்தது.
ஐஷர் மோட்டார்ஸ் லாபம் ரூ.376 கோடி
ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத் தின் முதலாவது காலாண்டு நிகர லாபம் 59% அதிகரித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டு முடிவில் இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி 58.6% உயர்ந்து ரூ.376.3 கோடியாக உள்ளது.
முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்துள்ளதால் வரு மானம் அதிகரித்துள்ளது. நிறு வனத்தின் வருமானம் 42 சதவீதம் அதிகரித்து ரூ.1,555.70 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் வருமானம் ரூ.1,096 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.347.70 கோடியாக இருக்கும் என முன்னதாக கணிக்கப்பட் டிருந்தது. நிறுவனத்தின் இதர வருமானம் 79 சதவீதம் அதிகரித்து 46.82 கோடியாக உள்ளது. வருடாந்திர வரி செலவுகள் 63 சதவீதம் உயர்ந்து 147.30 கோடியாக உள்ளது.
ராயல் என்பீல்டு வாகன விற்பனையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 38.3 சதவீதமாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 3.64 சதவீதம் உயர்ந்து 21,075.20 ரூபாயில் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 57% சரிவு
பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி ஜூன் காலாண்டு முடிவில் 306.30 கோடியை நிகர லாபமாக கண் டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த லாப விகிதம் சரிவுதான் என்றாலும், வங்கியின் நஷ்டம் குறையும் என்று எதிர்பார்க்கப் பட்டது. கடந்த மார்ச் காலாண்டில் வங்கியின் நிகர நஷ்டம் ரூ.5,367 கோடியாக இருந்தது. இந்திய வங்கித்துறையில் இது மிகப் பெரிய சரிவாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் 720.71 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
நிகர வட்டி வருமானம் முந் தைய ஆண்டின் காலாண்டோடு ஒப்பிடும்போது 9.8 சதவீதம் சரிந்து ரூ.3,699 கோடியாக உள்ளது. முடிவடைந்த காலாண்டில் மொத்த வருமானம் ரூ.13,930 கோடியாக உள்ளது. கடந்த ஜனவரி- மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.13,276 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்த வங்கியின் பங்குகள் 3.85% குறைந்து ரூ.128.95-ல் முடிந்தது.
சிண்டிகேட் வங்கி லாபம் ரூ.79 கோடி
சிண்டிகேட் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 74% சரிந்து ரூ.79 கோடியாக உள்ளது. வங்கியின் வாராக்கடன் அளவு 7.5% ஆக உள்ளது. கடந்த நிதி யாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண் டில் வங்கியின் நிகர லாபம் ரூ.301.98 கோடியாக இருந்தது. வருடாந்திர அடிப்படையிலான நிகர வட்டி வருமானம் 4.7% உயர்ந்து ரூ.1,479 கோடியாக உள் ளது. வட்டியல்லாத வருமானம் 10.7% அதிகரித்து ரூ.554.5 கோடி யாக உள்ளது, செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 24.6% சரிந்து ரூ.783.70 கோடியாக உள்ளது.
மொத்த வாராக் கடன் காலாண்டு அடிப்படையில் 11.6 சதவீதம் உயர்ந்து ரூ.15,434 கோடி யாக உள்ளது. ஜூன் காலாண்டு முடிவில் நிகர வாராக்டன் ரூ.10,051 கோடியாக உள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்த வங்கியின் பங்குகள் 1.32 சதவீதம் உயர்ந்து ரூ.76.65 ல் முடிந்தது.
ஜெய்ப்பூர் மண்டலத்தில் மூன்று கிளைகள் மோசடி செய் துள்ளதை தள்ளுபடி செய்துள் ளோம் என்றும் பிஎஸ்இ-க்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.