இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என தங்க நகை விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ரூ.2 லட்சத் துக்கு தங்க நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்கிற கட்டுப்பாட்டை தளர்த்தி ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். உள்நாட்டு தங்க நகை விற்பனை துறைக்கு 2016-ம் ஆண்டு மிக பெரிய கொந்தளிப்பான ஆண்டாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்ட இந்த துறையினர் எதிர்வரும் 2017-18 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்திந்திய ஆபரண கற்கள் மற்றும் ஆபரண நகை வர்த்தகர் கள் கூட்டமைப்பின் துணை அமைப் பான உள்நாட்டு ஆபரண கற்கள் மற்றும் தங்க நகை விற்பனை யாளர்கள் இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு தங்களது ஆலோ சனைகளை அனுப்பியுள்ளனர்.
முறைப்படுத்தப்பட்ட துறைகள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 சதவீதமாவது வளர்ச்சியை சந்திக்கின்றன. ஆனால் தங்க நகை விற்பனை துறை பத்தாண்டுகளா கவே கடும் பாதிப்பில் உள்ளது. இதனால் 2 லட்சத்துக்கான விற்ப னைக்கு பான் கார்டு கட்டாயம் என்கிற விதியை ஏற்கெனவே இருந்தபடி ரூ.5 லட்சத்துக்கு வாங்கும்போது என்று உயர்த்த வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் நிதின் கண்டேல்வால் கூறியுள்ளார். மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். அதிக இறக்குமதி வரி தொழில்துறையை பாதிக்கிறது. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால்தான் கடத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. இது உள்நாட்டு சில்லரை வர்த்த கத்தையும் பாதிக்கிறது எனவே வரியை குறைப்பதன் மூலம் கடத் தல் போன்ற முறையற்ற நடவடிக் கைகளைத் தடுக்க முடியும் என்றார். மேலும் விரைவில் ஜிஎஸ்டி வர உள்ள நிலையில் தங்க நகை விற்பனை துறைக்கு சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி) 1.25 சதவீதமாக இருந்தால் இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.
தங்க நகை சில்லரை விற்பனை யாளர்கள் மூலம் விற்கும் விதமாக அசோக சக்கரம் பொறித்த தங்க காசை பிரதமர் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், இதனால் தங்க காசு விற்பனையை அதிகப்படுத்த முடியும் குறிப்பிட்டார்.
மேலும் ஆபரண கற்கள் மற்றும் தங்க நகை விற்பனையாளர்கள் அமைப்பு, மத்திய அரசுக்கு பல ஆலோசனைகளையும் அனுப்பி யுள்ளது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறைக்கு சாதகமான கொள்கைகளை வகுக்க ஆலோசனைகளை அளித்துள்ளது. தங்க நகை தரத்துக்கான மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய கட்டுப்பாடுகளை வரவேற்பதாகவும் கண்டேல்வால் கூறினார்.