முன் தேதியிட்டு வரி வசூலித்தால் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தயங்கும் என்று மத்திய அரசு அமைத்த உயர்நிலை குழு தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்தியாவில் ஹட்சின்சனைக் கையகப்படுத்தியதற்காக அரசுக்கு ரூ. 15,000 கோடி வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் மேல் முறையீடு செய்தது.
இதுபோன்ற பிரச்னைகளை பரிசீலிக்க "செபி" முன்னாள் தலைவர் எம். தாமோதரன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைத்தது. அந்தக் குழு தனது பரிந்துரையை மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என தனது 77 பக்க அறிக்கையில் தாமோதரன் தெரிவித்துள்ளார். "மரணமும், வரி விதிப்பும் மனித வாழ்க்கையில் நிர்ணயிக்க முடியாத காரணிகளாக இருக்கின்றன", இதைக் கருத்தில் கொண்டு எதற்கு எந்த அளவு வரி விதிக்கப்படும், எந்த காலத்திலிருந்து அது கணக்கிடப்படும் என்பதைத் தெளிவாக வரையறுத்தல் அவசியம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்தேதியிட்டு வரி விதிக்கப்படுவது புதிய தொழில் தொடங்குவதற்கு மிகப் பெரும் தடைக்கல்லாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் சட்ட உரிமை அரசுக்கு இருந்தபோதிலும், அதுவே நிலையற்றதாக, தொடர் நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் 183 நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியா 132வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்தே அன்னிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராய தாமோதரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள சட்ட விதிமுறைகள் கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகாட்டு நெறிகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் வெளிப்படைத் தன்மை இருக்கும். எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை உடனுக்குடன் தெரிந்து அதைச் சரி செய்ய முடியும் என்று தாமோதரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு ஆணையமும் அதற்குள்ள அதிகார வரம்பு குறித்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.