வணிகம்

பங்குச் சந்தையில் 12% பிஎப் தொகை முதலீடு செய்யப்படலாம்

செய்திப்பிரிவு

பங்குச் சந்தையில் ஏற்றம் இருப்பதால் பங்குகளில் முதலீடு செய்யப்படும் பிஎப் தொகையை 12 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. படிப்படியாக இந்த தொகை உயர்த்தப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி வரை ரூ.7,468 கோடி பிஎப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி இடிஎப்களில் இந்த தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்த தொகையின் தற்போதைய மதிப்பு ரூ.8,024 கோடி ஆகும். 7.45 சதவீதம் அளவுக்கு முதலீடு உயர்ந்திருக்கிறது.

வரும் 22-ம் தேதிக்குள் இயக்குநர் குழு இதுகுறித்து விவாதிக்க இருக்கிறது. அப்போது எவ்வளவு தொகை கூடுதலாக முதலீடு செய்யப்படலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குறித்து பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய பங்குச்சந்தை அமைப்புகளிடமும் பேசி வருகிறோம். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நிச்சயம் அதிக தொகை (பிஎப்) பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.

நிதி அமைச்சகம் அதிகபட்சம் 15 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 5 சதவீத பிஎப் தொகை (ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகை) பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த அளவு 10 முதல் 12 சதவீதமாக உயரலாம் என்றார்.

இந்த வருடம் கூடுதலாக ரூ.1.35 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT