வணிகம்

2021-ம் ஆண்டு இ-காமர்ஸ் துறையின் மதிப்பு 5,500 கோடி டாலராக உயரும்: ரீடெய்ல் சங்கம், பிசிஜி ஆய்வு

செய்திப்பிரிவு

இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு தற்போது 600 முதல் 800 கோடி டாலர் வரை இருக்கிறது. வரும் 2021-ம் ஆண்டு 5,000 முதல் 5,500 கோடி டாலராக இருக்கும் என இந்திய ரீடெய்ல் சங்கம் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழும ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் எலெக்ட்ரானிக்ஸ், ஆடை கள், வீட்டு உபயோகப் பொருட் கள், பர்னிச்சர், உணவு, சுகாதாரம், மளிகை மற்றும் சொகுசுப் பொருட் களுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் மூலம் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு 3 சதவீதமாக இருந்த இ-காமர்ஸ் வர்த்தகம் இப்போது 23 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. மொத்தமாக டிஜிட்டல் வர்த்தகத்தின் தாக்கம் 9 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக இந்த காலத்தில் உயர்ந்திருக்கிறது.

தள்ளுபடிக்காக ஆன்லைனில் வாங்குபவர்களைவிட, தங்களுக்கு கிடைக்கும் சவுகர்யங்களுக்காக வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் 40 சதவீதம் நபர்கள் சவுகர்யத்துக்காக வாங்கினார்கள். 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 55 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இ-காமர்ஸுக்கு சாதகமான சூழல் நிலவுவதும் சந்தை மதிப்பு உயர்வதற்கு ஒரு காரணமாகும். ஸ்மார்ட்போன் விலை சரிவடைந்து வருகிறது, அதனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தவிர டேட்டா கட்டணமும் குறைந்து வருவதால் இ-காமர்ஸுக்கு சாதகமான சூழல் இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட்போன் பயன்பாடு 3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 30 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தவிர கடந்த சில ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு ஸ்மார்ட்போன்களின் விலை சரிந்துள்ளது என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT