கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் 22,475 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
9,500 ஆய்வுகள் மூலம் இந்த சொத்துகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக மக்களைவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதலளித்தபோது தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: கருப்பு பணத்தை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நிதியாண்டுகளாக 990 வரி விதிப்புக்குரிய குழுக்களில் ஆய்வு மேற்கொண்டதில் 1,474 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதே நிதியாண்டுகளில் 9,547 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் மூலம் 22,475 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வருடங்களில் வருமான வரித்துறையினரால் கிரிமினல் வழக்குகள் தொடர்வதும் அதிகரித்துள்ளது. கருப்பு பணத்தைத் தடுப்பதற்கு மத்திய அரசு சில செயல்முறைகளை கையாண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து கருப்பு பணம் வருவதை தடுக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது உள்ள தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் (ஐடிஎஸ்) மூலம் கணக்கில் காட்டப்படாத சொத்துகளைத் தாக்கல் செய்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செப்டம்பர் 30ம் தேதி வரை காலவரையறை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறப்பு விசாரணைக் குழு பனமா பேப்பர்ஸ் வெளியானது உட்பட பல விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஐடிஎஸ் மூலம் வருமானத்தை தாக்கல் செய்பவர்கள், தாக்கல் செய்யப்படும் தொகைக்கு 25 சதவீத வரியும் அபராதமும் இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் செலுத்த வேண்டும். மீதமுள்ள 25 சதவீத வரியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளும் மீதமுள்ள அபராதத்தை அடுத்த ஆண்டும் செப்டம்பர் மாதத்திற்குள்ளும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.