வணிகம்

பங்குச் சந்தையில் அக்டோபரில் ரூ.15,700 கோடி அன்னிய முதலீடு

செய்திப்பிரிவு

புது டெல்லி இந்திய பங்குச் சந்தையில் அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) செய்த முதலீடு ரூ. 15,700 கோடி ஆகும்.

அமெரிக்க அரசியலில் முட்டுக்கட்டை நிலவியபோதிலும், இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு பாதிக்கப்படவில்லை.

2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு ரூ.90,715 கோடி என இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் ரூ. 57,051 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். அதேசமயம் ரூ. 41,345 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மூலம் இந்திய பங்குச் சந்தைக்கு வந்த தொகை ரூ.15,706 கோடியாகும்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்த மொத்த முதலீடு ரூ.13,000 கோடி. கடந்த மூன்று மாதங்களில் எப்ஐஐ மூலம் வெளியேறிய தொகை ரூ.23,000 கோடி.

அக்டோபர் மாதத்தில் கடன் பத்திர முதலீடு ரூ.13,578 கோடியை எப்ஐஐ விலக்கிக் கொண்டது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை கடன் பத்திர சந்தையில் எப்ஐஐ-யின் மொத்த வெளியேற்றம் ரூ.51,212 கோடியாகும்.

செப்டம்பர் மாதத்திலிருந்தே பங்குச் சந்தையில் எப்ஐஐ முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் காணப்படும் தேக்க நிலையில் இந்திய பங்குச் சந்தை பத்திரமானது என எப்ஐஐ-க்கள் நினைப்பதில் தவறில்லை.

அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தை குறியீட்டெண் உயர்வதற்கு எப்ஐஐ-க்களின் பங்களிப்பு 1,785 புள்ளிகளாகும். இதனாலேயே அக்டோபர் 31-ம் தேதி பங்குச் சந்தை குறியீட்டெண் அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டதோடு 21,154 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவல் பதிவு செய்துள்ள அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 1,749 ஆகும். இவர்களால் நிர்வகிக்கப்படும் துணைக் கணக்குகளின் எண்ணிக்கை 6,369 ஆகும்.

SCROLL FOR NEXT