வணிகம்

ஜிஎஸ்டியை செப்.1-ல் இருந்து அமல்படுத்த வேண்டும்: அனைத்திந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

பிடிஐ

ஜூலை மாதம் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்திலிருந்து ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (CAIT) மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. சிறு வர்த்தகர்கள் ஜிஎஸ்டி சட்டத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் காலதாமதமாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக, இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள சிறு தொழில்களில் சுமார் 70 சதவீதம்பேர் இன்னும் மின்னணு தொழில்நுட்பங்களுக்கு மாறவில்லை. குறுகிய காலத்தில் இவர்கள் தங்களது தொழிலை கணினி மயமாக்குவது என்பது மிகப் பெரிய சவால்.

ஜிஎஸ்டி சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைமையில், தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு பெரிய மாற்றத்துக்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும், தவிர நாடு முழுவதும் வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வும் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

ஜிஎஸ்டி சட்டத்தை முன்னரே அமல்படுத்துவதற்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு சாதகமாகவே இருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் வர்த்தகர்கள் இன்னும் தயாராக இல்லை. வர்த்தகர்கள் ஜிஎஸ்டி சட்டத்தை புரிந்து கொண்டு, அதற்கேற்ப மாற்றங்களை செய்து கொண்டால்தான் தற்போதைய ’வாட்’ வரி விதிப்பு முறையிலிருந்து ஜிஎஸ்டி முறைக்கு மாறுவது எளிதாகவும், சிக்கலில்லாமலும் இருக்கும் என்றும் கூறினார்.

ஏனென்றால் ஜிஎஸ்டி சட்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட வரி விதிப்பு முறை. இதற் கான அனைத்து தேவைகளும் ஆன் லைன் மூலம்தன பெற முடியும்.

மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தும் முன், 60 நாட்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு போதுமான கல்வி மற்றும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இதற்கான காலம் மிகக் குறைவாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சுமார் 2 கோடி சிறுதொழில்கள் ஜிஎஸ்டி சட்டத்துக்குள் வரவும், புதிய வரி விதிப்பு முறையை புரிந்து கொள்ளவும் விழிப்புணர்வை உருவாக்க 60 நாட்கள் போதாது என்றார்.

இதனால் செப்டம்பர் 1 முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வர்த்தகர்களின் கவலைகள் சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளதால், இந்த முரண்பாடுகள் சரிசெய்யப்படும் என்றும் கந்தேல்வால் சுட்டிக் காட்டினார்.

SCROLL FOR NEXT