வணிகம்

கங்கை ஆற்றில் கப்பல் மூலம் கார்களை அனுப்ப மாருதி திட்டம்

பிடிஐ

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, தனது கார்களை கப்பல் மார்க்கமாக வாரணாசியிலிருந்து கொல்கத்தாவுக்கு அனுப்ப உள்ளது. இம்மாதம் 12-ம் தேதி தொடங்கும் சோதனை அடிப்படையிலான தேசிய நீர்வழித் தடம்1-ல் இந்த பரிசோதனை முயற்சியை மாருதி மேற்கொள்ள உள்ளது. இத்தகவலை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் திங்கள் கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பாக தேசிய நீர்வழி ஆணையம் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி இம்மாதம் 12-ம் தேதி தொடங்கும் சோதனை ஓட்டத்தில் வாரணாசியிலிருந்து கொல்கத்தாவுக்கு கப்பல் மூலம் கார்களை மாருதி நிறுவனம் அனுப்ப உள்ளது என்றார்.

12-ம் தேதி இரண்டு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. ஒன்றில் மாருதி கார்களும் மற்றொன்றில் கட்டுமான பொருள்களும் கொண்டு செல்லப்படுவதாக கட்கரி தெரிவித்தார்.

நாட்டின் போக்குவரத்தில் நீர்வழி மூலமாக நடைபெறுவது வெறும் 3.6 சதவீதமாக உள்ளது. இதை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 7 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர் மூலமான சரக்கு போக்குவரத்து சீனாவில் 47 சதவீதமாகவும், கொரியா மற்றும் ஜப்பானில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் நீர்வழி சரக்கு போக்கு வரத்து மிக முக்கிய அங்கம் வகிப்பதாக சுட்டிக் காட்டினார்.

நீர்வழி போக்குவரத்து அதிகரிக்கும்போது மீன் வளம் பாதிக்காது மேலும் மீனவர்கள் எந்தெந்த பகுதிகளில் மீன் வளம் அதிகமிருக்கிறது என்பதை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொள் ளும் வாய்ப்பைப் பெறுவர். அத்து டன் வெள்ள அபாயம் குறித்த அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

மும்பையில் வாகன நெரிசல் அதிகமிருப்பதால் அங்கு நீர்வழி போக்குவரத்து வாய்ப்பு குறித்து ஆராயுமாறு வந்துள்ள ஆலோ சனைகள் பரிசீலிக்கப்படுகிறது. மும்பையிலிருந்து தாணே வரை இத்தகைய சேவையை தொடங்கு வது குறித்து ஆராயப்படுவதாக கட்கரி குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT