ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் என்பது இன்னும் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம் என்கிற சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் குறித்த சர்ச்சை மீண்டும் தொடங்கி இருக்கிறது. ரகுராம் ராஜனுக்கு முன்பாக ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார்.
பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் ஓய்வு பெற்ற பிறகு வழக்கமாக செய்வது புத்தகம் எழுதுவது. சுப்பாராவ் எழுதி சில நாட்களுக்கு முன்பு வெளியான புத்தகம் `Who moved my interest rate’. கடந்த சில நாட்களாக முக்கியமான சர்ச்சையும் இதுதான்.
சமீபத்தில் ரகுராம் ராஜனுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் சுப்பாராவ் கவர்னராக இருந்த காலத்தில் நிதி அமைச்சகத்தில் இருந்து மறைமுகமாக நெருக்கடி இருந்தது. இவர் பதவியில் இருந்த காலத்தில் ப.சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகிய இரு நிதி அமைச்சர்களை கையாள வேண்டி இருந்தது. நிதி அமைச்சகத்தில் இருந்து இவர் சந்தித்த நெருக்கடிகள்தான் இந்த புத்தகம். இரு நிதி அமைச்சர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகளை இவர் தெரிவித்திருக்கிறார்.
ப.சிதம்பரம்
சுப்பாராவ் பொறுப்பேற்ற 2008-ம் ஆண்டு பணப்புழக்க நிர்வாக குழு என்கிற ஒன்றை ரிசர்வ் வங்கியின் அனுமதி வாங்காமலும் ஆலோசனை கூட செய்யாமலும் அப்போதைய நிதி அமைச்சர் அமைத்தார். இந்த செயல் என்னை மிகவும் பாதித் ததாக சுப்பாராவ் புத்தகத்தில் குறிப்பிட் டிருக்கிறார். அதன் பிறகு சிதம்பரத் திடம் பேசி இந்த கமிட்டியை கலைத் திருக்கிறார். ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள சிதம்பரமும், சுப்பாராவும் மெக் ஸிகோ சென்றுள்ளனர். அங்கு அனை வரையும் குறிப்பிட்டுப் பேசிய சிதம்பரம் சுப்பாராவ் பற்றி பேசவில்லை.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் 10-ல் எட்டு முறை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சுப்பாராவ் இதனை மொத்தமாக மறுத்திருக்கிறார். பதவியில் இருந்த ஐந்து வருடங்களும் மத்திய அரசின் நெருக்கடி இருந்தது. குறிப்பாக வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற நெருக்கடி தொடர்ந்து இருந்தது என எழுதி இருக்கிறார். வட்டியை குறைக்காததால் சிதம்பரம் பொதுவெளியிலேயே சுப்பாராவுக்கு எதி ராக கருத்து கூறினார். பணவீக்கத்தை போலவே வளர்ச்சியும் சவால்தான். வளர்ச்சிக்காக மத்திய அரசு தனியாக தான் நடக்க வேண்டும் என்றால் அதற் கும் தயார் என்று சிதம்பரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்தபோதும் கடும் நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார். நிதி அமைச்சரிடம் வட்டி குறைப்பு குறித்து ஏற்கெனவே சுப்பாராவ் உறுதி அளித்திருக்கிறார். தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்.
ஆனால் சுப்பாராவ் முறையாக அறிவிப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாக ‘கவர்னர் நல்ல செய்தி சொல்வார்’ என்று அவர் சென்றிருந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் மத்தியில் கூறினார். அடுத்த ஒரு மணிநேரத்தில் 0.50 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுப்பராவ் 2008-ம் ஆண்டு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். அவரது மூன்று ஆண்டு காலம் 2011-ம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால் பிரணாப் முகர்ஜி இவரது பதவியை நீட்டிக்க விரும்பவில்லை.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் இரண்டு வருடங்கள் பதவி நீட்டிப்பு அளிக்க விரும்பினார். மேலும் விரைவில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இது குறித்து உங்களிடம் பேசுவார் என்று சிங் கூறினார். ஆனால் பிரணாப் முகர்ஜி சுப்பாராவை தொடர்பு கொள்ளவில்லை. பிரதமர் அலுவலகம் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மற்றவர்களை போல தொலைக் காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டுள்ளார்.
நியமனங்கள்
மறுநியமனமே கேள்விக்குள்ளாகும் போது அவரது பரிந்துரைகள் ஏற்கப்படாதது ஆச்சர்யம் இல்லை. மத்திய அரசுடன் நெருக்கமான சூழல் இல்லாததால் சுப்பாராவின் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. துணை கவர்னர்களான உஷா தொராட் மற்றும் சுபிர் கோகர்ன் ஆகியோரை பதவி நீட்டிப்புக்காக சுப்பாராவ் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
இரு நிதி அமைச்சர்கள் மீது இத்தனை விமர்சனங்களை சுப்பாராவ் வைத்தாலும், 2008-ம் ஆண்டு ப.சிதம்பரம்தான் என்னை தேர்வு செய்தார் என்பதை குறிப்பிடவும் அவர் மறுக்கவில்லை.
ரகுராம்ராஜனை தக்க வைத்துக்கொள்ள இந்த அரசுக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்ட ப.சிதம்பரம்தான் சுப்பாராவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறார் என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது.
எந்த அரசாக இருந்தாலும் ரிசர்வ் வங்கி கவர்னரை பொம்மை யாக்க முயற்சிப்பது வருத்தத்துக் குரியது.