கருப்பு பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதை தடுக்கும் விதமாக குறைந்த விலை பங்குகளுக்கு (பென்னி ஸ்டாக்ஸ்) விலை வரம்பினை பிஎஸ்இ நிர்ணயம் செய்திருக்கிறது. வாரம், மாதம், காலாண்டு, ஆண்டு என ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு பங்கு எவ்வளவு விலை உயரலாம் என்பதை பிஎஸ்இ நிர்ணயம் செய்திருக்கிறது.
தினசரி அடிப்படையில் பங்குகளை பொறுத்து 5,10,20 சதவீதம் வரை உயர முடியம் என்ற எல்லை இருக்கிறது. அதே போல் வார விலை எல்லை, மாத விலை எல்லை, காலாண்டு விலை எல்லை ஆகியவற்றையும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்று பிஎஸ்இ-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: அதிக மதிப்புடைய பரிமாற்றங்கள் செய்பவர்களையும் குறைந்த விலை பங்குகளில் அதிக முதலீடு செய்பவர்களை பற்றியும் வருமான வரித்துறை நெருக்கமாக ஆராய்ந்து வருகிறது. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்கும் முறை படி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
பங்குகளுக்கு விலை எல்லை
சிறிய பங்குகள் மீது அதிக முதலீடு செய்யப்படுவதை கண்டுபிடிக்க விலை எல்லை உதவும். சிறிய பங்குகளின் விலை வழக்கத்திற்கு மாறாக ஏற்ற இறக்கத்துடன் காணும் பொழுது விலை எல்லை மூலமாக அதிக பணம் புழங்குவதை கண்டறிய முடியும்.
உதாரணத்துக்கு ஒரு பங்கு ஒரு நாளில் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரலாம் என்ற எல்லை இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வரம்பு பயன்படாது. இப்போது இதற்கு வார, மாத, காலாண்டு எல்லையை நிர்ணயம் செய்யும் போது ஒரு ரூபாயில் வர்த்தகமாகும் பங்கு ஓரிரு ஆண்டில் 200 ரூபாயை தொடாது.
பிஎஸ்இ ஒழுங்குமுறை உத்தி களை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. எதை கட்டுப்பாடுகள் என்று நாங்கள் வரையறை செய்கி றோமோ அதை நாங்கள் வெளிப் படையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தி வருகிறோம். மேலும் ஒழுங்குமுறைகளை வரையறை செய்வதில் நாங்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. சந்தை பாதுகாப்பாக இருக்க எதை செய்ய வேண்டுமோ அதை நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் கருப்பு பணம் பங்குச் சந்தையில் புழங்குகிறது என்று கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, `` கருப்பு பண பரிவர்த்தனைகள் நடக்காமல் இருக்க நாங்கள் மிக மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என்று ஆஷிஸ்குமார் சவுகான் தெரிவித்தார்.