வணிகம்

பட்டு ஜவுளி விலை உயரும் அபாயம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் நிலவும் வறட்சியால் 50 சதவீதம் மல்பரி சாகுபடி பரப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வெண்பட்டுக் கூடுகளின் விலை அதிகரிப்பால், இந்த ஆண்டு பட்டுத் துணிகள் விலை, இரு மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெண்மை மற்றும் மஞ்சள் பட்டுக்கூடு என்ற இருவகை பட்டு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 1,000 டன் பட்டுக்கூடு தேவைப்படும் நிலையில், தற்போது 575 டன் மட்டுமே உற்பத்தியாகிறது. இந்தியா முழுமைக்கும் ஆண்டுக்கு 10,000 டன் பட்டு தேவைப்படுகிறது. ஆனால், இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி ஆகிறது. மீதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, ஒசூர், நெல்லை, வேலூர், ஆரணி, தேனி, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பட்டுக்கூடு உற்பத்தியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வெண்பட்டுக் கூடு உற்பத்தியில் பழநி முதலிடம் வகிக்கிறது. 3வது இடத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், உற்பத்தியாகும் ஒரு பட்டுக்கூட்டில் 900 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை தரமான பட்டுநூல் கிடைப்பதால் திண்டுக்கல் பட்டுக்கூடுகளுக்கு பட்டு உற்பத்தியாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

பட்டுப்புழுக்கள், மல்பரி இலைகளை உணவாக உட்கொண்டு, பட்டுக்கூடுகளை கட்டுகின்றன. இந்நிலையில், கடந்த இரு ஆண்டாக திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பொய்த்தது. கடும் வறட்சியால் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய உதவும் மல்பரி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், பட்டுப்புழுக்களை விவசாயிகளால் வளர்க்க முடியாததால் நடப்பாண்டு 50 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 400 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டன. நடப்பாண்டில் இதே பருவத்தில் வெறும் 200 டன் மட்டுமே உற்பத்தியாகி உள்ளது.

குறிப்பாக, பழநி பகுதியில், 935 ஏக்கர் மல்பரி செடிகளை வறட்சியால் காப்பாற்ற முடியாமலும் பட்டுக்கூடு உற்பத்தியை கைவிடவும் முடியாமலும், மாற்று விவசாய வழியின்றி பரிதவித்து வகின்றனர்.

இதுகுறித்து பழநி மரிச்சிலும்பு கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி கூறியதாவது:

பட்டுக்கூடு விற்பனை மூலம், மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் 700 அடிக்கு கீழ் சென்று விட்டது. மழையும் பெய்யவில்லை. அதனால், மல்பரி செடிகளை வளர்க்க முடியவில்லை. வங்கிக் கடனை அடைக்க முடியவில்லை. அதனால், பட்டு விவசாயிகள் நலிவடைந்துள்ளனர். தட்டுப்பாட்டால் பட்டுக்கூடுகள் விலை கிலோ 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது என்றார் அவர்.

கர்நாடக சந்தையில் தமிழக பட்டுக்கூடுகள்

நாட்டிலேயே கர்நாடகா, தமிழகத்தில்தான் அதிக அளவு பட்டுக்கூடுகள் உற்பத்தியாகின்றன. ஆனால், தமிழகத்தில் பட்டு நூற்பாலைகள், முறுக்கேற்று நிலைகள் போதிய அளவில் இல்லை. பட்டுக் கூடுகளுக்கு எதிர்பார்த்த விலையும் கிடைப்பதில்லை. இதனால், கர்நாடகாவில் உள்ள ஆசியாவிலே மிகப்பெரிய பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில் தமிழக பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர். அதனால், தமிழகத்தில் பட்டு நூற்பாலைகள், முறுக்கேற்று நிலைகளை அமைக்க வேண்டும் என்றும் பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT