வணிகம்

முதலீட்டாளர் நலனே முக்கியம்: செபி தலைவர் யு.கே. சின்ஹா

செய்திப்பிரிவு

செபி வகுத்துள்ள விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.

முதலீட்டாளர்களின் நலனைக் காப்பதில் பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) எப்போதுமே விழிப்போடு செயல்படுவதாக அவர் மேலும் கூறினார்.

எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் நிறுவன த்தின் இயக்குநர் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் அங்கமான என்எஸ்இஎல் நிறுவனம் இன்னமும் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்க முடியாத நிலையில் திணறிவருகிறது. இத்தகைய சூழலில் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் இயக்குநர் குழு கூட்டம் எப்படி நடந்தது? என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய சின்ஹா, முதலீட்டாளர்களின் நலனை செபி நிச்சயம் காக்கும் என்றார். முதலீட்டாளர்கள் நலன் காக்கும் விஷயத்தில் செபி மிகவும் கண்காணிப்புடன் எச்சரிக்கையாக எப்போதும் விழிப்புடன் உள்ளது. முதலீட்டாளர் நலன் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளை ஒருபோதும் சமாதானம் செய்துகொண்டு எளிமைப்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை முதலீட்டாளர்களுக்கு அளி ப்பதாக அவர் கூறினார். முதலீட்டாளர்களின் நலன் காக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க செபி தயங்காது என்றும் அவர் கூறினார்.

பஞ்சாப், ஹரியாணா, டெல்லி வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், செபி விதிகளை எந்த நிறுவனங்கள் மீறுகின்றனவோ அந்த சமயத்தில் உரிய நடவடிக்கைகளை செபி எடுத்துள்ளது என்றார்.

கடந்த மாதம் எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் நிறுவன ங்களின் லைசென்ஸ் புதுப்பி க்கப்பட்டபோது இந்நிறுவனம் மீது சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. எத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன என்ற விவரத்தை சின்ஹா வெளியி டவில்லை.

எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் நிறுவனம் ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஜிக்னேஷ் ஷாவால் உருவாக்கப்பட்டது. இந்நிறுவன உயர் பதவியிலிருந்து ஷா மற்றும் ஜோசப் மாசே ஆகியோர் புதன்கிழமை பதவி விலகினர்.

இதனிடையே எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எல்ஐசி முன்னாள் இயக்குநர் தாமஸ் மாத்யூவை பொது நலன் இயக்குநராக செபி நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இடைக்கால ஏற்பாடாக பங்குச் சந்தை செயல்பாடுகளில் இந்நிறுவன பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் சிறப்புக் குழு உறுப்பினராக யு. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்எஸ்இஎல் நிறுவனத்தில் மிகப்பெரும் நிதி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்த 13 ஆயிரம் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5,600 கோடியை திரும்ப அளிக்க முடியாமல் இந்நிறுவனம் திணறிவருகிறது. இந்நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேட்டை சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்நிறுவனம் தவிர, இந்நிறுவனத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களும் இப்போது தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

முறைகேடுகளைத் தடுப்பது அதேசமயம் பங்குச் சந்தையை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் ஒரே சமயத்தில் எடுக்க வேண்டியுள்ளது என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.

பங்கு வர்த்தகம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் செபிக்கு வந்துகொண்டு இருக்கின்றன. இதில் 8 முதல் 10 எச்சரிக்கைகளை அடுத்தகட்ட நிலைக்கு எடுத்துசெல்கிறோம். என்றும் செபி தலைவர் சின்ஹா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT