தாமாக முன்வந்து கருப்புப் பணத்தைத் தெரிவிக்க அறிவித்துள்ள காலக்கெடு எக்காரணம் முன்னிட்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கணக்கில் காட்டாமல் சேர்த்துள்ள பணம் மற்றும் சொத்து விவரங்களைத் தெரிவித்து அதற்கு வரி செலுத்தி அதை கணக்கில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை மத்திய அரசு அளித்துள்ளது. உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கிய இத்திட்டம் இம்மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளைப் பகிர்ந்து வரும் மத்திய வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா, இத்திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாகவும், மக்கள் ஆர்வமுடன் இதை அறிந்துகொள்ள விவரங்கள் கேட்டுள்ளதாகவும் அவ்வப்போது தெரிவித்து வந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் வருமான விவரத்தைத் தெரிவித்து வரி ஏய்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் தங்களது வருமானத்தைத் தெரிவித்து விலக்கு பெற விரும்புவோர், கால நீட்டிப்பு கிடைக்கும் என காத்திராமல் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஆதியா குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தங்களது சொத்து விவரங்களைத் தெரிவிப்போர் சொத்து மதிப்பில் 45 சதவீதம் வரி மற்றும் அபராதமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகையை மூன்று தவணைகளில் செலுத்தும் வசதியையும் மத்திய அரசு அளித்துள்ளது. 2017 செப்டம்பருக்குள் முழு வரித் தொகையையும் செலுத்தியிருக்க வேண்டும்.