அதிக கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பார்ச்சூன் இதழ் வெளி யிட்டுள்ள பட்டியலில் ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சாந்தா கொச்சார் மற்றும் ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளனர். இந்தியாவில் உயர் பதவியில் உள்ள அதிகாரம் மிக்க 50 பெண்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக 8 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் முறையாக இடம் பிடித்துள்ள அருந்ததி பட்டாச்சார்யா முதலிடத்தையும், ஹெச்பிசிஎல் தலைவர் நிஷி வாசுதேவா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஏஇஸட் பி பார்ட்னர்ஸ் நிறுவன இணை நிர்வாகி ஜியா மோடி, டாஃபே தலைமைச் செயல் அதிகாரி மல்லிகா ஸ்ரீனிவாசன், கெப்ஜெமினி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அருணா ஜெயந்தி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரீதா ரெட்டி, பயோகான் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
கிரண் மஜும்தார், ஹெட்டி மீடியாவின் ஷோபனா பார்தியா ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.