மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி 25 கோடி டாலர் (ரூ. 1,612 கோடி) கடன் வழங்க முன்வந்துள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வேலைக்கு தகுதி படைத்தவர்களாக திறன் மேம்படுத்தும் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்துக்கு உலக வங்கி கடன் வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங் களிப்பு அவசியம் என்பதால் அரசு இந்த திட்டத்தை தொடங்கியது. 3 மாதம் முதல் 12 மாதம் வரையிலான குறுகிய கால பயிற்சியளிக்கும் இத்திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.
உலக வங்கியின் கடன் அனுமதி அளிக்கும் செயல் இயக்குநர் குழு இதற்கான ஒப்புதலை அளித் துள்ளது. இந்த திட்டத்துக்கு தேவைப்படும் நிதியின் ஒரு பகுதியை கடனாக வழங்க முடிவு செய்யப்பட்டதாக வங்கி வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 15 வயது முதல் 59 வயது வரையிலானவர் களுக்கு திறனறி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப் படுகிறது. தொழில் துறையினர் எதிர்பார்க்கும் திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி இருக்கும்.
ஆண்டுதோறும் வேலை தேடி 1.2 கோடி இளைஞர்கள் உருவாகின்றனர். 15 வயது முதல் 29 வயது வரையிலான இப்பிரிவினருக்கு திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலைவாய்பை உருவாக்கம்
இத்திட்டத்தின் முக்கிய நோக் கமே பயிற்சி அளிப்ப தோடு மட்டுமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது மற்றும் தொழில் முனைவோராக உருவாக்குவதும் அடங்கும். வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக வங்கி 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் இத்திட்டப் பணிக்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2017 முதல் 2023 வரையான காலத்துக்கு இக்கடன் அளிக்கப்படுகிறது.
1 கோடி பணியாளர்கள்
2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு 24 முக்கிய துறைகளில் ஒரு கோடி திறன் மிகு பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மனித வளத்தை மேம்படுத்தி அவர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தும் இத்திட்டம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று உலக வங்கியின் இந்தியப் பிரிவு தலைவர் ஜூனைத் அஹ்மத் தெரிவித்தார்.
உலக வங்கியின் கணிப்பின் படி 88 லட்சம் இளைஞர்கள் இத் திட்டத்தினால் பயனடைந்து பொரு ளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை அளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளது.