முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலைகள் அதிகமாக வருவதால் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் அடைந்து வருகின்றன.
நடப்பு நிதி ஆண்டில் சென்செக்ஸை தாண்டி ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் நல்ல வருமானம் கொடுத்திருக்கிறன.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரையில் பி.எஸ்.இ. ஸ்மால்கேப் குறியீடு 55.86 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மிட்கேப் குறியீடு 40.29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 24.11 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
திங்கள் கிழமை சென்செக்ஸ் தன்னுடைய உச்சபட்ச புள்ளி யான 27969.82 புள்ளியை தொட்டது.
மிட்கேப் குறியீடு தன்னுடைய 52 வார உச்சபட்ச புள்ளியான 10068 புள்ளியை செப்டம்பர் 16 அன்று தொட்டது. அதேபோல ஸ்மால்கேப் குறியீடு தன்னுடைய 52 வார உச்சபட்ச புள்ளியான 11352 புள்ளியை அதே நாளில் தொட்டது.
சந்தை சிறப்பாக இருக்கும் போது ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் சிறப்பாக இருக்கும்.
அதே சமயம் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவும் போது இதே பங்குகள் வேகமாக சரியும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.
நடப்பு ஆண்டில் இதுவரை 82,266 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.
அதேபோல 1.36 லட்சம் கோடி ரூபாய் கடன் சந்தைக்கு வந்திருக்கிறது.
சிறுமுதலீட்டாளர் பங்களிப்பு தான் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் உயர்வுக்கு காரணம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.