செல்போன் சேவை அளிப்பதில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழும் வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்த ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி முதல் ரூ. 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்வதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்டின் பீட்டர்ஸ் தெரிவித்தார்.
2007-ம் ஆண்டு இந்தியாவுக்குள் சேவையைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ரூ. 55 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நெட்வொர்க்கை விரிவுபடுத்துவது, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் (அலைக்கற்றை லைசென்ஸ்) கூடுதலாகப் பெறும் நடவடிக்கையிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் முதலீடு ரூ. 4 ஆயிரம் கோடி முதல் ரூ. 6 ஆயிரம் கோடி வரை உள்ளதாக அவர் கூறினார். 3-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ. 11,500 கோடி செலுத்தியது தங்கள் நிறுவனம்தான் என்று பீட்டர்ஸ் தெரிவித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த வோடபோன் நிறுவனம் இந்தியாவில் 15 கோடி செல்போன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி நிறுவனத்துக்கு செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நிறுவனமாக இது திகழ்கிறது.
நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்வது என்பது அலைக்கற்றை லைசென்ஸ் ஒதுக்கீடு, அதற்குரிய கட்டண நிர்ணயம் தெளிவாகத் தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் இன்னமும் ஒளிவு மறைவற்ற நிலை உருவாகவில்லை. எங்கள் நிறுவனத்துக்குத் தோன்றியுள்ள சில சந்தேகங்கள் போக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
வோடபோன் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதற்காக வழங்கப்பட்ட லைசென்ஸ் இன்னும் மூன்று மாதங்களில் முடிவடையப் போகிறது. பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் செயல்படுவதற்கு இந்நிறுவனம் பெற்றிருந்த லைசென்ஸ் இன்னும் மூன்று மாதங்களில் முடிவடையப் போகிறது. இரு பெருநகரங்களில் பார்தி ஏர்டெல் வசமிருந்த அலைக்கற்றை மற்றும் மும்பையில் லூப் மொபைல் வசமிருந்த அலைக்கற்றை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏலம் விடப்பட உள்ளது.
அரசு நிபந்தனையின்படி இந்தப் பெருநகரங்களில் செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு மட்டுமே அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று நகரங்களில் அலைக்கற்றை பெற வோடபோன் விண்ணப்பிக்கும் எனத் தெரிகிறது.
200 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் வோடபோன் முதலீடு செய்ய உள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாக மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சமீபத்தில் தெரிவித்தார். இதன்படி பார்க்கும்போது பிரிட்டன் நிறுவனமான வோடபோன் பிஎல்சி தாய் நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டை 100 சதவீதம் அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அன்னிய முதலீட்டு வரம்பு முற்றிலுமாக நீக்கப்படும் என அரசு அறிவித்தது. வோடபோன் நிறுவனத்துக்கு இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 84.5 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறையில் 74 சதவீதத்துக்கும் கூடுதலாகப் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.
வோடபோன் பிஎல்சி வருமானத்தில் பெரும்பகுதி இந்தியாவின் பங்களிப்பு அடங்கியுள்ளது. மேலும் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இந்தியாவிலிருந்து கிடைப்பதைக் கணக்கிட்டால் நான்காமிடமாக உள்ளது. அடுத்த நிதி ஆண்டில் நிறுவனம் 900 கோடி டாலரை முதலீடு செய்ய உள்ளது. சர்வதேச அளவில் 4 ஜி, 3 ஜி சேவை அளிப்பதற்காக இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக பீட்டர்ஸ் தெரிவித்தார்.