வணிகம்

டீசல் மோட்டார் சைக்கிள்: ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம்

செய்திப்பிரிவு

நாட்டில் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டீசலில் இயங்கும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இரு சக்கர வாகனத்தையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற விழாவில் நிறுவனத் தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பவன் முன்ஜால் இவற்றை அறிமுகம் செய்தார்.

ஹீரோ ஹெச்எக்ஸ் 250 ஆர், டீசல் மோட்டார் சைக்கிள் ஆர்என்டி மற்றும் பேட்டரியில் ஓடக்கூடிய லீப் மற்றும் 110 சிசி திறன் கொண்ட டாஷ் எனும் ஸ்கூட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். சாகசம் விரும்புவோருக்கென 150 சிசி திறன் கொண்ட எக்ஸ்ட்ரீம் மோட்டார் சைக்கிளும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மாடல்கள் ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் பெயரின்றி அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றுக்கு பின்னர் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார். வாகனங்களின் விலையும் ஒவ்வொரு வாகனம் அறிமுகத்தின்போது நிர்ணயிக்கப் போவதாக அவர் கூறினார்.

புதிய தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்துக்கு இணையாக அளிப்பதில் நமது பொறியாளர்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் வாகனங்கள் வடிவமைப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெறச் செய்வதற்காக புதிய மாடல்களை உருவாக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

SCROLL FOR NEXT