வணிகம்

ரூ. 2,500 கோடி சாரதா சீட்டு மோசடியில் அம்பலமானது சிறிய தொகையே: எஸ்ஐஎப்ஓ அறிக்கை தாக்கல்

பிடிஐ

மேற்குவங்க மாநிலத்தில் செயல்பட்ட சாரதா சீட்டு நிறுவன மோசடி புகாரில் இதுவரை ஏமாற்றப்பட்டதாக வெளியான ரூ. 2,500 கோடி என்பது மிகச் சிறிய அளவுதான் என்று மத்திய அரசு நிறுவன விவகாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

பொன்ஸி திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளித்து நிதி திரட்டும் நிறுவனங்களில் சாராத சீட்டு நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் 279 நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டி மோசடி செய்துள்ளதாக நிறுவனங்கள் செய்யும் மிக தீவிரமான மோசடி குறித்து விசாரிக்கும் புலனாய்வு அலுவலகம் (எஸ்ஐஎப்ஓ) தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு அரசிடம் தாக்கல் செய்த 500 பக்க விசாரணை அறிக்கையில் மோசடி செய்ததாகக் கூறப்படும் தொகை மிகக் குறைவானது. உண்மையில் இந்நிறுவனம் பல கோடிகளை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவன மோசடியில் மேற்கு வங்க மாநில மக்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் ஏமாந்துள்ளனர். கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த இந்நிறுவன மோசடியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது.

தொடக்கத்தில் சாராத சீட்டு நிறுவன மோசடி என்ற அளவிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனம் சீட்டு நிறுவனமாக மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் மோசடி திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் பொன்ஸி திட்டங்களை செயல்படுத்தியது இந்நிறுவனம்தான் என்று விசாரணை தொடங்கியபிறகு தெரியவந்தது. பழைய வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று இந்நிறுவனம் அளித்து மோசடி செய்துள்ளது. நிதி சார்ந்த செயல்பாடுகள் என்ற போர்வையில் ரியல் எஸ்டேட் நடவடிக்கையிலும் சாராதா குழுமம் ஈடுபட்டதாக 500 பக்க எஸ்ஐஎப்ஓ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாராதா குழும நிர்வாகிகள் மீது 20 வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு மேற்கு வங்க காவல்துறைக்கு அறிக்கை பரிந்துரைத்துள்ளது. நிதி திரட்டிய 4 நிறுவனங்களிடமிருந்து தகவல் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சாராதா பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் லிமிடெட், வங்காள மீடியா பிரை வேட் லிமிடெட் மற்றும் குளோபர் ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் ஆகியன அடங்கும்.

பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கப் பணமாகவே மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவனங்களை கையகப்படுத்துவது, சொத்துகளை வாங்குவதற்கு மட்டும் வங்கி மூலமான பரிவர்த்தனையை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சாரதா குழுமத்தின் முன்னணி அதிகாரிகள், மேற்கு வங்க மாநில அமைச்சர், உயர் காவல்துறை அதிகாரி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிஎப்ஐஓ பரிந்துரைத்துள்ளது. அதேபோல இந்நிறுவனம் மூலம் பணம் பெற்றுள்ள கால்பந்து சங்கங்கள், பிரபல தனி நபர்களிடமும் விசாரிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT