அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதத்தில் இதுவரை இந்திய பங்குச்சந்தையில் ரூ.6,795 கோடி முதலீடு செய்துள்ளனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழல் மேம்பட்டிருப்பதால் இந்த முதலீடு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவது, நிறுவனங்களின் வருமானம், பருவமழை மற்றும் சாதகமான அமெரிக்க தகவல்கள் காரணமாக இந்திய சந்தையில் அந்நிய முதலீடு உயர்ந்து வருகிறது.
தவிர தொடர்ந்து 14-வது மாதமாக பயணிகள் வாகன விற்பனை உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இந்திய பங்குச்சந்தையில் ரூ.3,178 கோடி அந்நிய முதலீடும், இந்திய கடன் சந்தையில் ரூ.3,617 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்த முதலீடு ரூ.6,795 கோடி ஆகும்.
இந்த ஆண்டில் இதுவரை பங்குச்சந்தையில் ரூ.44,028 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. மாறாக கடன் சந்தையில் இருந்து ரூ.3,730 கோடி முதலீடு வெளியேறியுள்ளது.
4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.40,780 கோடி சரிவு
சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.40,780 கோடி சரிந்துள்ளது. குறிப்பாக டிசிஎஸ் பங்கு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் ஐடிசி, ஹெச்டிஎப்சி மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பும் சரிந்துள்ளது. மாறாக ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ மற்றும் ஹெச்யூஎல் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது. இந்த ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.35,716 கோடி உயர்ந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.31,723 கோடி அளவுக்கு சரிந்தது. அதிகபட்சமாக ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ.13,303 கோடி உயர்ந்தது.