வணிகம்

செபி தலைவருக்குப் பதவி நீட்டிப்பு

செய்திப்பிரிவு

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தற்போதைய தலைவர் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுவரை செபி தலைவர் பதவியில் சின்ஹா இருப்பார். இதற்கான அறிவிப்பு வியாழன் இரவு செபி அலுலகத்துக்கு அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 18 முதல் 2016-ம் ஆண்டு வரை செபியின் தலைவர் பதவில் யூ.கே. சின்ஹா இருப்பார். கடந்த மூன்று ஆண்டுகளாக யூ.கே.சின்ஹா பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்கள் நலன் காப்பதற்கான பல சீர்திருத் தங்களை கொண்டு வந்துள்ளார். அன்னிய முதலீட் டாளர்களுக்குப் புதிய பிரிவு கொண்டுவந்தது, மெர்ச்சன்ட் பேங்கர்களுக்கு விதிமுறைகளை வகுத்தது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

சின்ஹாவின் முன்னோடிகளான சி.பி.பாவே, எம்.தாமோதரன் மற்றும் ஜி.என். பாஜ்பாய் ஆகியோரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படவில்லை. இதற்கு முன்பு டி.ஆர்.மேத்தா நீண்ட காலமாக (1995 - 2002) செபி தலைவராக இருந்தார்.

1976-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யூ.கே.சின்ஹா. நிதித்துறையின் இணை செயலாளர், யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் தலைவர் ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்ற பிறகு செபி தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

கடந்த நவம்பர் மாதம்தான் உச்ச நீதிமன்றம் யூ.கே. சின்ஹாவின் நியமனத்தை உறுதி செய்தது. மத்திய அரசு சட்டப்படிதான் இவரை நியமித்திருக்கிறது என்று தீர்ப்பு அளித்தது.

SCROLL FOR NEXT