பிரசார் பாரதி அமைப்புக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சஷி சேகர் வேம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த பொறுப்பில் இருந்த ஜவஹர் சிகார் பதவி விலகி ஏழு மாதங்களுக்கு பிறகு தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார். சஷி சேகர் இதற்கு முன்னர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். கடந்த வெள்ளிக் கிழமை இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநரான இவர் பிரசார் பாரதி அமைப்பின் இயக்குநர் குழுவில் பகுதிநேர உறுப்பினராகவும் இருந்தவர். குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கமிட்டி இவரை பரிந்துரை செய்தது. இந்த கமிட்டியில் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி சி.கே பிரசாத், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். வேம்பட்டி இந்த பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் இருப்பார். பிரசார் பாரதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சையான அமைப்பு ஆகும்.