ஏழை எளியவர்களுக்கு கடன் அளிப்பதில் அதிக வட்டி வசூலிக்க வேண்டாம் என்று சிறு வணிக நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏழைகளுக்கு கடன் அளிப்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டாம். ஓரளவு நியாயமான வட்டியை வசூலிக்க வேண்டும் என்றும் அவர் சிறு வணிகக் கடன் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டார்.
ரகுராம் ராஜனின் இந்த கருத்து நிர்வாகவியல் குரு என்றழைக்கப்படும் சி.கே. பிரகலாத்தின் கருத்துகளுக்கு முரணாக உள்ளது. எதிர்காலம் கீழ் நிலை மக்களிடத்தில் உள்ளது என்ற அவரது புத்தகத்தில் இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகம் ஏழைகளுக்கு பொருள்களையும் சேவைகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இதுதான் வர்த்தக உத்தி என்றும் கூறப்பட்டிருந்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மிகச் சிறந்த கொடையாளி. இவர் ஆண்டு தோறும் ஏழைகளுக்கு உதவு வதற்காக பல கோடி டாலர்களை செலவிடுகிறார். ஏழ்மையை ஒழிப்பதோடு லாபம் ஈட்டுவதையும் வெளிப்படுத்துவதாக அந்த புத்தகம் அமைந்துள்ளது. மிகச் சிறந்த பொருளாதார அறிஞரான ரகுராம் ராஜன், சமீபத்தில் நடைபெற்ற சிறு வணிகம் சார்ந்த நிகழ்ச்சியில், பிரகலாத் வெளிப்படுத்திய கருத்து ஏழைகளுக்கு எதிரானதாக அமைந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
ஏழை மக்களிடமிருந்து அதிக லாபம் ஈட்டக் கூடாது. அதில்தான் வளம் இருக்கிறது என்று கருதக் கூடாது. நியாயமான லாபம் ஈட்ட வேண்டும். ஏழை மக்களிடமிருந்து லாபம் ஈட்டினால் அது சமூக ரீதியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கும். உங்களுக்கு பணம் வந்த விதம் எப்படி என்ற கேள்விகளை எழுப்பும் என்றும் சுட்டிக் காட்டினார்.
பிரகலாத் காட்டிய வழியின் படி உலகம் முழுவதும் குறிப்பாக நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இதுவரை சென்றடையாத சந்தைகளை குறிவைத்து தங்களது வியாபாரத்தை பெருக்கி அதிக லாபம் ஈட்டுகின்றன.
ஏழைகள் மத்தியில் வியாபாரம் செய்வதிலும் ஓரளவு லாபம் இருக்கத்தான் செய்யும். ஒரு தொழில் நிலை பெறுவதற்கு லாபம் அவசியம். எந்த ஒரு தொழிலுமே சுய சார்பின்றி இருந்தால் அந்த தொழிலை தொடர்ந்து நடத்துவதில் அர்த்த மேயில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஏழை, எளிய மக்கள் தங்களது அவசர தேவைகளுக்காக கடன் வாங்குகின்றனர். இவர்கள் அருகிலுள்ள பிரபலமான அமைப்பிடமிருந்துதான் கடன் பெறுகின்றனர். இத்தகைய பிரபல நிறுவனங்களை முறைப்படுத்த போதிய கண்காணிப்பு அமைப்பு நம்மிடையே இல்லை. இத்தைகய சூழலில் சிறு வணிகக்கடன் வழங்கு நிறுவனங்கள்தான் ஏழைகளைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நடுத்தர ரக நிதி அமைப்புகளே (எம்எப்ஐ) சில சமயம் உள்ளூரில் கடன் வழங்கும் தனியாரிடம் செல்லுமாறு மக்களை நிர்பந் திக்கின்றன. இத்தகைய தனி நபர்கள் ஏழை மக்களின் கை, கால்களை வாங்குபவர்களாக விளங்குகின்றனர். இத்தகைய சூழலில் எம்எப்ஐ-கள்தான் மக்களை காக்கும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஏழைகளுக்கு கடன் அளிப்பதில் மிகக் குறை வான வட்டிக்கு அளிக்க வேண்டி யதில்லை. அதற்காக அநியாய வட்டியும் வசூலிக்கவேண்டாம் என்றார். குறைந்த வட்டிக்கு கடன் வழங்க பல நிறுவனங்கள் உருவாகும்போது வட்டிக்கான வரம்பு நிர்ணயிப்பதை நீக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்போதைய சூழலில் நடுத்தர நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் கடனுக்கு வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது பல பிரச்சினைகளை உருவாக்கும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றார். இதன் மூலம் தனிநபரின் கடன் பிடியில் சிக்குவதை தடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடுத்தர நிதி நிறுவனங்கள் அதிகபட்சம் 26 சதவீதம் வரை வட்டி விதிக்கலாம் என மலேகாம் குழு பரிந்துரை அளித்தது. இதன்படிப்படையில் 2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வட்டிக்கு உச்ச வரம்பை நிர்ணயித்தது.
2010-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் நடுத்தர நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து வட்டி விகிதத்தை நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி மலேகாம் குழுவை நியமித்தது. ஒன்றுபட்ட ஆந்திரத்தில்தான் அதிக அளவில் கடன் பெற்று திரும்ப செலுத்தா தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.